இந்திய உள்நாட்டு மிகப் பிரபலமான டெஸ்ட் தொடரான துலிப் டிராபி தற்பொழுது நடந்து வருகிறது. ஆறு மண்டலங்களாக மொத்த இந்திய உள்நாட்டு அணிகளும் பிரிக்கப்பட்டு இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.
தற்பொழுது இந்தத் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மேற்கு மண்டல அணிக்கும் மத்திய மண்டல அணிக்கும் இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணியின் கேப்டன் பிரியங் பன்சால் முதலில் தமது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
மேற்கு மண்டல அணியில் பிரித்வி ஷா, சூரியகுமார், புஜாரா என்று நட்சத்திர வீரர்களால் நிரம்பி இருக்கிறது. இந்த கோப்பையை அதிக முறை வென்ற அணி மேற்கு மண்டல அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த முறை மேற்கு மண்டல அணியின் பேட்டிங் தூண்களை மிக எளிதாக மத்திய மண்டல அணி பந்துவீச்சாளர்கள் சாய்த்தார்கள். அவர்களது பந்துவீச்சை எதிர்கொண்டு இவர்களால் ரன் சேர்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது. 65 ரன்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள்.
ப்ரீத்வி ஷா 26, பன்சால் 13, புஜாரா 28, சூரியகுமார் 7, சர்ப்ராஸ் கான் 0 என வரிசையாக நடையைக் கட்டி விட்டார்கள். பிறகு அஜித் சேத் தற்போது பொறுமையாக விளையாடிய 72 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் அணியை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் மேற்கு மண்டல அணி தற்பொழுது சேர்த்திருக்கிறது.
மத்திய மண்டல அணியின் தரப்பில்
சிவம் மாவி மூன்று விக்கெட்டுகள், ஆவேஸ் கான், யாஷ் தாக்கூர், சௌரப் குமார், சரன்ஸ் ஜெயின் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி உள்ளார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு இருந்தார். இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்ட சூரியகுமார் கழட்டிவிடப்பட்டிருந்தார். சர்ப்ராஸ்கான் தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சையாக மாறி இருந்தது. ஆனால் இவர்கள் எல்லோருமே ஒரே போட்டியில் தடுமாறி இருப்பது குறிப்பிடத்தக்கது!
மேலும் இனி பெரிய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி தங்களை நிரூபித்தே இந்திய அணிக்கு மீண்டு வர வேண்டும். காயத்திலிருந்து நேராக குணமடைந்து இந்திய அணிக்கு செல்லக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகள் முன்னாள் வீரர்களிடம் இருந்து அதிக அளவில் தற்பொழுது வர ஆரம்பித்து இருக்கிறது.
கே எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து இருந்தாலும் அவர் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் நேரடியாக சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது சரியானது அல்ல என்று தற்போது பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் அவர் ஆசிய கோப்பையில் களமிறங்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.






