இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு, மொத்தம் இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறக்கூடிய எல்லோரும் விளையாட வேண்டும், அதே சமயத்தில் புதிதாக அணிக்குள் வர வாய்ப்பு இருக்கின்ற வீரர்களும் விளையாட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வழக்கமான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இவர்கள் மூன்றாவது போட்டியில்தான் களமிறங்குகிறார்கள். இந்த காரணத்தினால் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத ருதுராஜ் கூட அணியில் இருக்கிறார்.
மேலும் அறிவிக்கப்பட்டிருந்த 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் ஆப் பின்னர்கள் யாரும் இல்லை என்பதை அறிவோம். தற்பொழுது இந்த இடத்தை நிரப்புவதற்காக தமிழகத்தின் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான அணி தேர்வு பற்றி பேசி உள்ள ரோஹித் சர்மா ” அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதே எங்கள் முயற்சி. இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் 11 பேர் மட்டுமே விளையாடினால், எங்களால் எப்படி பென்ச் வலிமையை உருவாக்க முடியும்?. வேறு சில அணிகள் வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்க்கிறோம்.
ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய பயணம் செய்து விளையாட வேண்டி இருக்கும். 11 போட்டிகளுக்கு மொத்தம் நீங்கள் நாட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று விளையாட வேண்டி இருக்கிறது.
எனவே உங்களுக்கு நிறைய போட்டிகள் மற்றும் நிறைய பயணங்கள் உண்டு. வெளியில் இருக்கும் நம் வீரர்கள் சில போட்டிகளை விளையாடுவதின் மூலம், அவர்கள் நம்பிக்கை உடன் இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். திடீரென்று அவர்களை தூக்கி எறிவதைப்போல செய்ய முடியாது.
இறுதியில் வீரர்கள் யாராக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் எப்பொழுது அணிக்கு அழைக்கப்பட்டாலும், நாம் இதுவரை எப்படி பார்த்து வந்தோமோ அப்படியே செயல்பட வேண்டும். பென்ச் வலிமை என்பது எப்பொழுதும் முக்கியம். வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் எப்போதும் முயற்சி செய்து வருகிறோம்!” என்று கூறி இருக்கிறார்!