இந்திய அணி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணி எப்படியான பிளேயிங் லெவனுடன் களமிறங்கும் என்று பார்க்கலாம்.
இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மிக முக்கியமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. எனவே இதற்கான தயாரிப்புகள் இங்கிருந்து ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆஸிக்கான வியூகம்
இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், அதற்கான இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் இருந்தே ஆரம்பிக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
இதன் காரணமாக களிமண் கருப்பு ஆடுகளத்திற்கு பதிலாக, செம்மண் சிவப்பு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக கொடுக்கப்படும் எனவும், பும்ரா மற்றும் சிராஜ் உடன் ஆர் சி பி அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயால் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் மட்டுமே இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
சிவப்பு மண் ஆடுகளத்திற்கு பிளேயிங் லெவன் அமையுமா?
இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய பிளேயிங் லெவனில் முதல் ஐந்து இடங்களில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஆறாவது இடத்தில் சர்பராஸ் கானுக்கு பதிலாக அனுபவ வீரர் கேஎல்.ராகுல் இருப்பார். சுழல் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா வருவார்கள். வேகப்பந்து வீச்சுக்கு பும்ரா, சிராஜ், யாஷ் தயால் இருப்பார்கள்.
ஒருவேளை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான களிமண் கருப்பு ஆடுகளம் அமைக்கப்பட்டால் யாஷ் தயால் அறிமுகம் ஆக மாட்டார். அவருடைய இடத்தில் குல்தீப் யாதவ் விளையாட வைக்கப்படுவார். அக்சர் படேல் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய உத்தேச பிளேயிங் லெவன் :
ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, சிராஜ் மற்றும் யாஷ் தயால்.