இந்திய அணி அடுத்ததாக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் டி20 தொடரில் இருந்து ஜடேஜா ஏற்கனவே ஓய்வு அறிவித்திருக்கும் நிலையில், தற்போது ஒரு நாள் தொடருக்கும் இந்திய தேர்வு குழு ஜடேஜாவை நீக்கி அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சார் பட்டேலை உள்ளே கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் இந்திய தேர்வு குழு இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட போகும் இந்திய அணியை அறிவித்தது. டி20 ஃபார்மட்டில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வினை அறிவித்திருக்கும் நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு நாள் தொடருக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரு நாள் தொடருக்கு ஜடேஜாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. அதற்கு மாற்றாக தற்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அக்சார் பட்டேல் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது இந்திய முன்னாள் வீரர்கள் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை சேர்க்காதது நியாயமற்றது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியிருக்கிறார். மேலும் அக்சார் பட்டேல் சமீபத்தில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக ஜடேஜாவை ஓரம் கட்டுவது தவறு என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அக்சார் பட்டேல் ஏற்படுத்திய தாக்கம் ரவீந்திர ஜடேஜாவுக்கு சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதன் குணமே இதுதான். உங்கள் சீனியாரிட்டியை வைத்தோ அல்லது நீங்கள் அணிக்கு திரும்பினாலும் நீங்கள் அடுத்த தொடரில் விளையாடுவீர்களா? என்பதை தீர்மானிக்காது. பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அக்சார் பட்டேல் சவால் விடுகிறார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:வாசிம் அக்ரம் இந்த இந்திய வீரரை பார்த்துதான் பயந்தார்.. அவர் சொன்னபடியே நடக்கும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேச்சு
அக்சார் பட்டேல் எல்லா சூழ்நிலைகளிலும் குறிப்பாக பவர் பிளேவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அவருக்கு கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. எனவே வளர்ந்து வரும் கிரிக்கெட்டில் இதை ஏற்றுக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஜடேஜா கடந்த சில வருடங்களாக இந்திய அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் சமீப காலமாக அக்சார் பட்டேல் நன்றாக செயல்படுவதை வைத்து ஜடேஜாவை தூக்குவது நியாயமற்ற செயல்”என்று கூறியிருக்கிறார்






