அடுத்த ஆண்டு போல்லார்ட் மும்பை அணியில் இருக்க மாட்டார் எனக் கூறிய ஆகாஷ் சோப்ரா – அதற்கு நக்கலாக டிவிட் செய்து பின்னர் டெலிட் செய்த போல்லார்ட்

0
153
Aakash Chopra and Kieron Pollard

2022ன் ஐ.பி.எல் தொடர் முடிந்தாலும், ஐ.பி.எல் தொடரையொட்டிய விவாதங்களும், பதில் அளிப்புகளும் இன்னும் முடியவில்லை. அதே சமயத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அணிகளுக்கும், வீரர்களுக்கும் வாழ்த்துக்களும் வந்தபடியேதான் இருக்கின்றன.

தற்பொழுது சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் விமர்சகராக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஆகாஷ் சோப்ராவுக்கும், முன்னாள் வெஸ்ட் இன்டீஸ் வீரர் கீரன் பொலார்டுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் முட்டிக்கொண்டு அது முடிவுக்கும் வந்திருக்கும் போல தெரிகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியால் ஆறு கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட கீரன் பொலார்டின் பேட்டிங் செயல்பாடு மோசமாக இருந்தது. மொத்தம் 11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே 107.46 என்ற குறைந்த ஸ்ட்ரைக்ரேட்டிலேயே அடித்திருந்தார். இதனால் அவரது பிறந்தநாள் அன்றே அவருக்கு ஆடும் இடம் மறுக்கப்பட்டு, தென்ஆப்பிரிக்க புதுமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்க்கு வாய்ப்பு தரப்பட்டது.

அப்போது இந்தச் சூழலில் ஆகாஷ் சோப்ரா “கீரன் பொலார்ட் போக வேண்டும். டெவால்ட் பிரிவீஸ் வரவேண்டும். அவருடைய பந்துவீச்சு இந்த விக்கெட்டில் எடுபடும். ஆனால் அவரை அணியில் எடுக்கமாட்டார்கள். எனவே பொலார்டிற்கு டாட்டா பை பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அத்தோடு மேலும் “மும்பை அணியில் பொலார்டின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம். இப்பொழுது பார்த்ததே பொலார்டின் கடைசி ஆட்டமாக இருக்கலாம். அவரை வெளியே விட்டால் ஆறு கோடி மும்பை அணிக்கு கிடைக்கும். முருகன் அஷ்வினையும் (1.6கோடி) போகவிடலாம் என்று நினைக்கிறேன். உனத்கட் (1.3கோடி) பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் கண்டிப்பாக டைமல் மில்ஸ்க்கு (1.5) பை பை சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இதற்கெல்லாம் பின்பு கடந்த வியாழக்கிழமை கீரன் பொலார்ட் ஆகாஷ் சோப்ராவை டாக் செய்து “இரசிகர் பட்டாளமும் பின் தொடர்பவர்களும் அதிகரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தொடரட்டும்” என்று உள்குத்தாக ஆகாஷ் சோப்ராவின் தன்மீதான விமர்சனத்திற்கு ட்வீட் செய்திருந்தார். தற்பொழுது இந்த டிவிட் பொலார்டால் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வருட ஐ.பி.எல் சீசன் பற்றியும், சாம்பியன் ஆன குஜராத் அணி மற்றும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து பொலார்ட் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது!