இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரரை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம்.
டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி வருகிற 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. ஒன்பதாம் தேதி நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னி மைதானத்திலும், பத்தாம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்திலும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன.
இந்திய அணிக்கு போட்டி இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து அணியும் அடிலெய்டு மைதானத்தின் மற்றொருபுறம் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
7ம் தேதி நடந்த பயிற்சியின்போது, இங்கிலாந்து வீரர் டேவிட் மலான், தொடை பகுதியில் திடீரென காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காயம் தீவிரமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தனர். இதனால் அரை இறுதி போட்டியில் அவரை விளையாட வைக்கப்போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து, யார் மாற்று வீரராக வருவார்? என்று விவாதங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் இருந்து வந்த தகவலின் படி, டேவிட் மலானுக்கு பதிலாக பில் சால்ட் விளையாட வைக்கப்பட உள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 தொடரில் இங்கிலாந்து அணி டி20தொடரை கைப்பற்றுவதற்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கேப்டன் ரோகித் சர்மாவின் கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயிற்சியின் பாதியிலேயே வெளியேறி உள்ளார்.
சிறிது நேரம் ஐஸ் கட்டி வைத்து வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார். பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் குணமடைந்து விட வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
அணி நிர்வாகம் தற்போது வரை காயம் எப்படி இருக்கிறது? என்பதை பற்றிய அறிக்கையை வெளியிடவில்லை. அநேகமாக ஒன்பதாம் தேதி ரோகித் சர்மாவின் காயம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.