பாகிஸ்தான அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தான் அணியின் புதிய டி20 கேப்டன் ஷாகின் அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் இந்த போட்டியை சந்தித்தது. மேலும் பாகிஸ்தானில் பேட்டிங் வரிசையில் சில அதிரடியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நியூசிலாந்து அணியின் தரப்பில் கேன் வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார்.
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேவை ரன் ஏதும் எடுக்காமல் ஷாகின் அப்ரிடி வெளியே அனுப்பினார். ஆனால் ஷாகின் அப்ரிடியின் ஒரு ஓவரில் 24 ரன்கள் எடுத்து, 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் ஒன்பது பவுண்டரிகள் உடன் 42 பந்தில் 57 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரில் மிட்சல் 27 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் அதிரடியாக 67 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரின் ஆட்டம் நியூசிலாந்தை பெரிய ரன்கள் நோக்கி தள்ளியது.
அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் 11 பந்தில் 19 ரன், மார்க் சாப்மேன் 11 பந்தில் அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு, 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் அதிகபட்ச டி20 ரன் இதுவாகும். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் அப்பாஸ் அப்ரிடி இருவரும் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர் சய்ம் அயூப் அதிரடியாக எட்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அதிரடியாக 14 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக மாற்றி அனுப்பப்பட்ட முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 35 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இப்திகார் அகமது மட்டுமே 24 ரன்கள் குறிப்பிடும்படி எடுத்தார். மற்ற யாரும் வெற்றிக்கு தேவையான அளவிற்கு ரன்கள் எடுக்க வில்லை.
பாகிஸ்தான் அணி இறுதியாக 18 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.