பாகிஸ்தான் சொந்த மண்ணில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
சுருண்ட தென் ஆப்பிரிக்கா
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் குயிண்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ரிஷா ஹென்றிக்ஸ் தாக்குப் பிடித்து விளையாடி 36 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். நான்காவது இடத்தில் வந்த டிவால்ட் பிரிவீஸ் 22 பந்தில் 21 ரன் மட்டுமே எடுத்தார்.
இதற்கடுத்து கடைசி கட்டத்தில் டோனவன் பெரேரா 14 பந்தில் 29 ரன்கள், கார்பின் போஸ் 23 பந்தில் 30 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது. ஷாகின் அப்ரிடி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
பாபர் அசாம் அதிரடி
இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைய்ம் அயுப் ரன் ஏதும் எடுக்காமலும், ஃபர்கான் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் சேர்ந்து பொறுப்பாக ஆடி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றார்கள்.
இதையும் படிங்க: கில் கம்பீர் ஐபிஎல் மாதிரி நினைச்சிட்டாங்க.. வீரர்களோட நம்பிக்கைய உடைச்சு நாசம் பண்றாங்க – ஸ்ரீகாந்த் வருத்தம்
இறுதியில் பாகிஸ்தான அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பாபர் அசாம் 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் 68 ரன்களும், சல்மான் அலி ஆகா 26 பந்தில் 36 ரன்களும் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி நீண்ட நாட்கள் கழித்து தொடரை வென்றது.






