இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா பாத்திமா கூறியிருக்கிறார்.
இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தான் தயாராகி உள்ள விதம் குறித்து பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் சனா பாத்திமா விரிவாகப் பேசி இருக்கிறார்.
இது குறித்து சனா பாத்திமா பேசும் பொழுது ” உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் அணிக்கு கேப்டனாக இருப்பது என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமான விஷயம்தான். ஆனால் நான் ஒரு கேப்டனாக மகேந்திர சிங் தோனியிடம் இருந்து உத்வேகம் பெறுகிறேன்”
“தோனி அவர்கள் இந்திய அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் கேப்டனாக எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் களத்தில் முடிவெடுக்கும் விதம் மற்றும் அமைதி மேலும் வீரர்களை ஆதரிக்கும் விதம், ஆகியவற்றில் இருந்து நான் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருந்தது. கேப்டன் பதவி கிடைத்ததும் நான் தோனி போல் மாற வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரது நேர்காணல்கள் நிறையவற்றைப் பார்த்து கற்றுக் கொள்ள முடிந்தது”
“இந்த முறை உலக கோப்பையில் நாங்கள் ஜிங்சை உடைத்து முன்னேறுவோம். ஏனென்றால் இந்த தொடர் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இளம் வீராங்கனைகள் அறிவார்கள். நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் அரை இறுதிக்கு முன்னேறுவோம்”
இதையும் படிங்க : எம்எஸ் தோனியின் ரூம் கதவு இந்த நேரத்தில் மட்டுமே மூடி இருக்கும்.. பழக மிகவும் பண்பான மனிதர் – டெவால்ட் பிரவீஸ் பேட்டி
“பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட தொடங்கி இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பரிசுத்தொகையை அதிகரிப்பதன் மூலமாக ஐசிசி ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறது. இது பாகிஸ்தானில் வளரும் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்று கூறியிருக்கிறார்.