ஒரு காலத்தில் மூன்று அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் குறைந்த நிலையில், முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெறுவதில்லை.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். இதேபோன்று ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடிக்கடி நடைபெறும். இந்த சூழலில் பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் நிலையில் அதற்கு ஒரு பயிற்சி களமாக முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கு பெறுகின்றன.
இந்த போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதிக் கொள்ளும். இதில் யார் அதிக புள்ளிகளை பெறுகிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். இந்த தொடருக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தான், நியூசிலாந்தும், பிப்ரவரி 10ஆம் தேதி நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும், பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் மோதுகிறது. பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள லாகூர் மற்றும் கராச்சி கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறது. அண்மையில் தென்னாப்பிரிக்காவை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றியை கண்டது.இதேபோன்று நியூசிலாந்து அணியும் தாங்கள் கடைசியாக இலங்கைக்கு எதிராக விளையாடி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள். மூன்று பலமான அணியும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இது நல்ல பயிற்சி களமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.