2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலில் பாகிஸ்தான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் அணிக்கு பாபர் ஆசமை கேப்டனாக அறிவித்தது. பின்னர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன தென்னாப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. அதற்குப் பிறகு தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான டேவிட் ரீடையும் பயிற்சியாளராக அறிவித்து இருக்கிறது.
இந்த உலகக்கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக வீரர்களுக்கு புதிய பயிற்சிகளை வழங்கி அவர்களை உலகக் கோப்பைக்கு தயார்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதற்குப் பின்னர் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு 50 ஓவர் உலகக் கோப்பை வென்று தர காரணமாக இருந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனை பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்தது. இது குறித்து அவர் கூறும் பொழுது ” பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவதில் உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. மேலும் சர்வதேச அரங்கில் அவர்களின் வெற்றிக்கு பங்களிக்க நான் ஆர்வமாக உள்ளேன்.
இது நிஜமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பொன்னான நேரம். ஒரு புதிய நிர்வாகம் மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்கும் உந்துதல் கொண்ட வீரர்கள் தற்போது அமைந்திருக்கிறார்கள். வர உள்ள டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெடை உயர்த்தவும், அவர்களது பாரம்பரியத்தை நிலைநாட்டவும் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இவரது பரிந்துரையின் பேரில் தற்போது சிஎஸ்கே அணிக்கு மன மற்றும் திறன் சீரமைப்பு பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த டேவிட் ரீடை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக நியமித்துள்ளது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் ரீட் 2021ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சென்றடைய உள்ளார். ஏனெனில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இதையும் படிங்க: சிஎஸ்கே ஸ்டீபன் பிளமிங்.. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ஆகிறாரா?.. வெளியான புதிய தகவல்கள்
இதன் காரணத்தால் டேவிட் ரீட் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றடைய இருக்கிறார். இவருடன் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பீல்டிங் பயிற்சியாளராக சைமன் ஹெல்மோட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்கள்.