எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம் – மகேந்திர சிங் தோனி பேச்சு!

0
2586
Dhoni

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200ஆவது போட்டியாகும்!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக பட்லர் 52 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 21 ரன்னுக்கு இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கான்வே 50 ரன்கள் எடுத்தார். ரகானே 31 ரன் எடுத்தார். சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி 19 ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுத்து, சந்திப் சர்மாவின் இருபதாவது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுத்து, அடுத்த மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்க முடியாமல் 3 ரன்கள் மட்டுமே எடுக்க, சென்னை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆட்ட முடிவுக்குப் பின் பேசிய மகேந்திர சிங் தோனி ” இந்த ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சாளர்களுக்குப் பெரிதாக இல்லை. ஆனால் எங்களுடைய பேட்டிங்கில் மத்தியில் நிறைய டாட் பால்கள் இருந்தது. விக்கெட்டில் பந்து கொஞ்சம் நின்று திரும்பியது. நாங்கள் கடைசி பேட்டிங் ஜோடியாக இருந்ததால், தொடரின் ஆரம்பத்தில் இருப்பதால் ரன் ரேட்டை பார்க்க வேண்டி இருந்தது. இதனால் எடுத்ததும் எங்களால் கடினமாக ரன்களுக்காக போக முடியவில்லை. நாங்கள் இன்னும் சிங்கிள்ஸ்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி ” பேட்டிங்கில் நான் பேன்சியான விஷயங்களை விரும்புவதில்லை. கடைசியில் பந்து வீச்சாளர்கள் சில தவறுகளை செய்வார்கள் என்று காத்திருந்தேன். கடைசி ஓவரில் பந்துவீச்சாளர் அழுத்தத்தில் இருந்தார். இப்படியான சூழ்நிலையில் நாம் நம்மை நம்ப வேண்டும். நேராக அடிக்கப் பார்ப்பது தான் என் பலம். நாங்கள் பனியின் அளவை பார்த்தோம். முதல் சில ஓவர்களுக்குப் பிறகு ஒப்பிட்ட அளவில் அது சமமாகி விட்டது. நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருநூறாவது போட்டியில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி ” நான் மைல்கற்கள் குறித்து நினைப்பதில்லை. 199 ஆவது போட்டி 200வது போட்டியெல்லாம் ஒன்றுதான். இது ஒரு பாராட்டு. இதற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி. ஆனால் இதில் எந்த சிறப்பும் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!