உண்மைய சொல்லனும்னா.. விராட் கோலி நிலைமைல வேற யார் இருந்தாலும், இந்நேரம் டீம்ல இருந்து எப்பயோ தூக்கிருப்பாங்க – கம்பீர் கருத்து

0
221

விராட் கோலி இடத்தில் வேறொரு வீரர் இருந்திருந்தால் நிச்சயம் அவரை இந்தியா அணையில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள் என்று கௌதம் கம்பீர்.

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டனாக கே எல் ராகுல் இருந்தார். அவர் 62 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த விராட் கோலி அரைசதம் கடந்த பிறகு பந்தை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, தனது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமல்லாது தனது முதல் டி20 சதத்தையும் அவர் நிறைவு செய்திருக்கிறார். 61 பந்துகளில் 122 ரன்கள் அடித்து, இந்திய வீரர்கள் மத்தியில், டி20 போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச கோரை பதிவு செய்திருக்கிறார். இப்படி ஒரே போட்டியில் ஏராளமான சாதனைகளை முறியடித்த விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் டி20 உலக கோப்பை துவங்குவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாக விராட் கோலி இத்தகைய சிறப்பான ஃபார்மிற்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணி நிர்வாகம் கொடுத்து வரும் தாராளமான வாய்ப்பு மற்றும் விராட் கோலியின் செயல்பாடு இரண்டையும் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார். “விராட் கோலி எத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்து சதத்தை அடித்து இருப்பதை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவர் மீண்டும் இப்படி நல்ல நிலைமைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் சரியாக செயல்படவில்லை என்றால் எந்த இளம் வீரர்களும் இந்திய அணியில் இருந்திருக்க முடியாது.” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

“இறுதியாக எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது. அதுவும் சரியான நேரத்தில் நடந்திருக்கிறது. உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த சமயத்தில் இப்படி நல்ல நிலைமைக்கு திரும்பி இருப்பதால் முதுகில் இருக்கும் மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போன்று தோன்றும். 3 ஆண்டுகளாக தொடர்ந்த விமர்சனத்திற்கு சரியான பதிலாக இருக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கும். இந்த மூன்று ஆண்டு காலம் ஒரு சதம் கூட அடிக்காமல் இந்திய அணியில் வேறு எந்த இளம் வீரராலும் இருந்திருக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் அஸ்வின், ராஹானே, ரோகித் சர்மா, கே எல் ராகுல் போன்ற முக்கிய வீரர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நான் இதுவரை பார்த்ததில் ஒருவர் கூட இத்தனை ஆண்டுகள் சதம் அடிக்காமல் இந்திய அணியில் நீடித்தது இல்லை. விராட் கோலிக்கு இந்த மகத்தான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்திருக்கிறது என்றால் அதற்கு அவரது முந்தைய கால பேட்டிங் மட்டுமே காரணம். பல ஆண்டு காலமாக தொடர்ந்து அவர் இதனை சம்பாதித்து இருக்கிறார்.” என்றார்.