3வது டி20ல் விராட்கோலியுடன் பேட்டிங் செய்யும்போது, என் மனதில் இதைமட்டுமே நினைத்திருந்தேன் – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ் பேட்டி!

0
8559

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டக்ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெறும் 21 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கீழ் வரிசையில் வந்த இளம் வீரர் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் சர்வதேச அரை சதத்தை பூர்த்தி செய்து சரிவிலிருந்து மீட்டார். அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல்(1), ரோகித் சர்மா(17) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆடமிழந்த ஏமாற்றம் அளித்தனர். அதற்குப்பிறகு களம் கண்ட விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடக்கம்.

- Advertisement -

விராட் கோலியும் டி20 அரங்கில் தனது 33வது அரை சதத்தை அடித்தார். 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடக்கம். இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில், “நான் முதலில் சான்ஸ் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சூழ்நிலையில் என் மனதில் இரண்டு மூன்று ஷார்ட்கள் இருந்தது. நான் அதனை முயற்சி செய்யும்பொழுது மிடில் பேட்டில் என்னால் பந்தை எதிர்கொள்ள முடிந்தது. இப்படி ஒரு கடினமான சூழலில் நமது இயல்பான ஆட்டத்தை விட சற்று கூடுதலான முயற்சியை நாம் வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணிக்காக நம்பர் 4 இடத்தில் விளையாடுவது மிகுந்த நம்பிக்கையை கொடுத்து வருகிறது. எனக்கு நம்பர்.4 இடத்தில் ஆடுவது மிகவும் பிடித்திருக்கிறது. விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும்பொழுது என் மனதில் இருந்ததெல்லாம், நான் கிடைக்கும் பந்துகளில் சான்சை எடுக்க வேண்டும். போதிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டு அழுத்தத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்பதுதான். அது சரியாக அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.