முதல் டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணி அபார ஆட்டம் ; போட்டியில் முன்னிலை!

0
270
Ind vs Aus

கிரிக்கெட் உலகம் பெரிதும் எதிர்பார்த்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது!

போட்டிக்கான டாசை வென்று பேட்டிங் செய்வதென ஆஸ்திரேலிய கேப்டன் தீர்மானிக்க உள்ளே வந்த ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் கவாஜா இருவரையும் அதிரடியாக சமி மற்றும் சிராஜ் வெளியேற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த லபுசேன் மற்றும் ஸ்மித் இருவரும் பொறுமையாக அதேசமயத்தில் ரன்களை திரட்டியும் ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார்கள். மதிய உணவு இடைவேளையின் போது இரண்டு விக்கட்டுகள் மட்டுமே வீழ்ந்து இருந்தது.

இதற்கு அடுத்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஜடேஜாவின் சுழல் வித்தை ஆரம்பித்தது. 49 ரன்களில் ஸ்டம்பிங் மூலம் லபுசேனை வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்திலேயே புதிதாக உள்ளே வந்த ரென்ஷாவை எல்பிடபிள்யு முறையில் வீழ்த்தினார். அடுத்து இந்திய அணியை அச்சுறுத்தும் ஸ்மித்தை 37 ரன்களில் வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் விக்கட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிய ஆரம்பித்தது. 63.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கட்டுகளையும் அஸ்வின் மூன்று விக்கட்டுகளையும், சிராஜ் மற்றும் சமி தலா ஒரு விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் கண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் மிக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஒருநாள் போட்டி ஆட்டம் போல் அதிரடியாக இருந்தது. அபாரமாக விளையாடிய அவர் அரை சதம் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிய ஒரு ஓவர் மீதம் இருக்கையில் 20 ரன்களில் கே எல் ராகுல் வெளியேறினார். அவரது விக்கட்டை ஆஸ்திரேலிய அறிமுக வீரர் மர்பி கைப்பற்றினார். அதற்கு அடுத்து அஸ்வின் வந்து விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்.

ரோஹித் சர்மா தற்பொழுது 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியா அணியை எட்டிப் பிடிக்க 100 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஒன்பது விக்கட்டுகள் கைவசம் இருப்பதால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் தற்பொழுது முன்னிலையில் இருக்கிறது என்று கூறலாம்!