இந்திய அணி எப்போதும் இல்லாத வகையில் வேகப்பந்து வீச்சு துறையில் அசாதாரணமாய் விளங்குகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த நாடுகளுக்கும், எந்த நாட்டின் மைதானங்களிலும் சவால் விடக்கூடிய அணியாக திகழ்கிறது இந்திய அணி!
மரபான டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணி கோலோச்சும் அதே நேரத்தில், நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் தடுமாறியே வருகிறது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்யும்போது எதிரணிக்கு என்ன மாதிரியான இலக்கை நிர்ணயிப்பது என்பதில் பலகீனமாக இருக்கிறது. இலக்கைத் துரத்தும்போது அதற்கேற்றார் போல் ஆடக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இலக்கை நிர்ணயிக்க சரிவருவதில்லை. காரணம் மரபான முறையில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு, நவீன கிரிக்கெட் வடிவத்திற்கான தாக்குதல் பாணி கிரிக்கெட் கைக்கூடவில்லை.
இந்திய டி20 அணிக்குத் தற்போதை தேவையாய் இருப்பது சேவாக் போல் முதல் பந்திலிருந்து இருந்து தாக்கி ஆடக்கூடிய வீரரும், விக்கெட்டுகள் சரிந்தாலும் தைரியமாய் ஆடக்கூடிய வீரரும்தான். இந்த மாதிரி இயல்பாய் ஆடக்கூடிய வீரர்களும், தைரியமான பேட்டிங் அணுகுமுறையும் இல்லாத காரணத்தாலே டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும்போது தடுமாறியும், டி20 உலகக்கோப்பைகளில் பெரிய தாக்கத்தையும் உருவாக்க முடியாமல் திணறுகிறது!
தற்போது வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ளதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதற்கு தீர்வுகாண முயல்கிறது. இதற்காக மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. அடுத்து அயர்லாந்துடன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணி சிறப்பாய் செயல்பட்டு தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்திய டி20 கிரிக்கெட்டிற்கு தைரியமான பேட்டிங் அணுகுமுறையைக் கொண்டவர்களாகவும், சீராகத் தொடர்ந்து ரன் அடிக்கக் கூடியவர்களாகவும் ருதுராஜ், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சூர்யகுமார், சஞ்சு சம்சான், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
இவர்களைக் கொண்டு இந்திய அணி நிர்வாகம் புதுவிதமாய் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது அயர்லாந்து அணியுடன் டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியே, அடுத்து இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரின் முதல் போட்டியிலும் விளையாடும் என தகவல்கள் வெளிவருகிறது. இதன் மூலம் இளம் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க இந்திய நிர்வாகம் விரும்புவது தெரிய வருகிறது. கூடிய விரைவில் இந்திய டி20 கிரிக்கெட்டில் பெரியளவிலான மாற்றங்கள் வரலாம்!