ஷமி இல்லை.. இந்திய பவுலிங் படை பலவீனமாக இருக்கிறதா? – டெம்பா பவுமா ஓபன் ஸ்பீச்!

0
584
Bavuma

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நாளை முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. ஆசியா தாண்டி வெளியில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், போட்டியில் தீவிரம் அதிகமாக இருக்கும்.

முதல் போட்டி நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு புகழ்பெற்ற மைதானம். நல்ல வேகத்துடன் நல்ல பவுன்ஸ் இருக்கும். நிலைமைக்குத் தகுந்தவாறு விளையாடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன்கள் கொண்டுவர முடியும்.

- Advertisement -

பேட்ஸ்மேன்களுக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் நடுவே சிறந்த கிரிக்கெட் போரை பார்க்கலாம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு விருந்து இப்படியான டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும்.

இப்படியான நிலையில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான இந்தியாவின் முகமது சமி காயம் காரணமாக தொடரை தவற விட்டு இருக்கிறார். எனவே அவர் இல்லாதது இந்திய பந்துவீச்சு படையை பலவீனமாக மாற்றுகிறதா? என்கின்ற கேள்வி இருக்கிறது.

முகமது சமியின் பந்துவீச்சு என்பது பந்து தரையைத் தொட்ட பின் என்ன செய்யும் என்று கணிப்பது மிக மிகக் கடினமானது. பேட்ஸ்மேன்கள் வெளியில் என்ன சொன்னாலும் உள்ளுக்குள் அவரைப் போன்ற ஒருவரை விளையாட விரும்ப மாட்டார்கள். குறிப்பாக தென் ஆப்பிரிக்க மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரும்பவே மாட்டார்கள்.

- Advertisement -

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறும் பொழுது “கிரிக்கெட் வீரர்களாக நீங்கள் சிறந்த வீரர்களை எதிர்த்து விளையாடி வர விரும்புகிறீர்கள். முகமது சமி அப்படி சிறந்தவர்களில் ஒருவர். அவருக்கு எதிராக விளையாட எங்களில் பலர் காத்திருந்தார்கள்.

ஆனால் இந்தியாவிடம் இப்பொழுதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. சமியின் இடத்தில் யார் உள்ளே வந்தாலும், அவர்கள் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவார்கள் என்பது உண்மை.

வெளிப்படையாக இந்திய அணியில் தற்போது சமி இல்லை. ஆனாலும் கூட இந்தியன் பந்துவீச்சு தாக்குதல் இன்னும் மிக வலிமையாக இருக்கிறது. கடந்த 5, 10 ஆண்டுகளில் இவ்வளவு நிறைய டெஸ்ட் வெற்றிகளை அவர்களால் பெற முடிந்ததற்கு, இப்படியான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருப்பதுதான் காரணம்!” என்று கூறியிருக்கிறார்!