விராட் கோலி இந்திய அணிக்கான மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, இந்திய அணிக்கு பகுதி நேர கேப்டன் களாக வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடக்கூடிய நிலைமைக்கு சென்று இருக்கிறது.
ராகுல் டிராவிட் இத்தனை கேப்டன்களை வைத்து விளையாடுவதை விரும்பாதவராக எப்பொழுதும் இருந்திருக்கிறார். அவருக்கு இது குறித்து அதிருப்தி இருப்பதாக ஆரம்பத்தில் இருந்து செய்திகள் வந்தது.
மேலும் ஒரு கேப்டன் ஒரு தலைமை பயிற்சியாளர் எனும் பொழுதுதான் அவர்களுக்குள் ஒரே சிந்தனை ஒரே திட்டம் என்பது உருவாகும். பல கேப்டன் ஒரு பயிற்சியாளர் என்கின்ற பொழுது, வெற்றிக்கான நிலையான அணியை உருவாக்குவது என்பது கடினம்.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 11-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு யார் இந்திய அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார்? என்பது குறித்து மீண்டும் தலைவலி டிராவிட்டுக்கு உருவாகி இருக்கிறது.
காரணம் ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட காயத்தால் வெளியில் இருக்கிறார். சூரிய குமார் யாதவும் அதே போல் காயத்தால் வெளியில் இருக்கிறார். இன்னொரு இளம் கேப்டன் ருதராஜ் கையில் காயம் அடைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து வெளியேறி இருக்கிறார்.
மேலும் மிக முக்கியமாக டி20 கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாமல் ரோகித் சர்மா இருந்து வருகிறார். எனவே இந்திய அணியை வழிநடத்தக்கூடிய இடத்தில் இருக்கும் இவர்கள் யாருமே தற்போது இந்திய அணிக்கு கிடைப்பது உறுதியாகவில்லை.
எனவே இந்திய டி20 அணியை வழிநடத்தக்கூடிய இடத்தில் எந்த இளம் வீரர் இருக்கிறார் என்று பார்க்க வேண்டியது இருக்கிறது. ஒருவேளை ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு கில் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய அணியை வழிநடத்த அவருக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. தற்பொழுது அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ஆனால் அவர் மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் முழுவதுமாக விளையாட வைக்கப்படுவாரா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.
எப்படி பார்த்தாலும் இந்த இருவர் மட்டுமே ஆப்கானிஸ்தான் தொடருக்கு மற்ற யாரும் கிடைக்காத பொழுது கேப்டனாக இருப்பதற்கான அதிக வாய்ப்பில் இருக்கிறார்கள்!