“நம்பர் 1 டீமா வருவிங்க நான் நம்பறேன்” – தோற்று உலகக் கோப்பையில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கம்பீர் உருக்கம்!

0
3365
Gambhir

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இரண்டு முறை நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ், இன்று தனது கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான நாளை பதிவு செய்தது!

தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் சூப்பர் சிக்ஸ் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய மூன்று அணிகளும் இந்தச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

இந்தச் சுற்றில் ஒரு பிரிவில் உள்ள மூன்று அணிகள் இன்னொரு பிரிவில் உள்ள மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். மேலும் தங்களுடைய பிரிவில் இருந்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த அணிகளில் எந்த அணியையாவது வென்று இருந்தால், அந்த புள்ளியும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் அந்த அணிக்கு கிடைக்கும்.

இதன் அடிப்படையில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் தங்கள் பிரிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த இரண்டு அணிகளையும் வென்று இருந்த காரணத்தால் 4 புள்ளிகள் ஏற்கனவே அவர்கள் கைவசம் இருந்தது. மேலும் இந்தச் சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் வென்றதால் அவர்கள் 6 புள்ளிகள் உடன் வலிமையாக இருந்தார்கள்.

எனவே இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தங்களது அடுத்த இரண்டு ஆட்டத்தில் தோற்க வேண்டும், வெஸ்ட் இண்டீஸ் தங்களது மூன்று ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும் ரன் ரேட்டில் வலிமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்கள் எடுத்து மிக மோசமாக சுருண்டது. அந்த அணியில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே தாக்குப்பிடித்து 45 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் ஆல் ரவுண்டர் மெக்மூலன் அபாரமாக பந்துவீசி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஸ்காட்லாந்து அணிக்கு ரன் கணக்கு துவங்கும் முன்பே முதல் விக்கெட் விழுந்து விட்டது. ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூ கிராஸ் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய மெக்மூலன் இருவரும் சேர்ந்து 100 ரன்களை தாண்டி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள்.

இதில் மெக்மூலன் வெற்றி எளிமையான நிலையில் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். களத்தில் இறுதிவரை நின்ற மேத்யூ கிராஸ் 74 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். ஸ்காட்லாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை வரலாற்று முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது!

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு ட்விட்டை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிந்திருக்கிறார். அதில் “நான் வெஸ்ட் இண்டிஸை நேசிக்கிறேன். நான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். நீங்கள் உலகின் நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது!