ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்திய மகளிர் அணி தங்களுடைய 2வது போட்டியில் இன்று நியூசிலாந்து மகளிர் அணியுடன் பலப்பரிட்சை மேற்கொண்டனர்.
இன்று நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து மகளிர் அணியில் அதிகபட்சமாக சேட்டர்த்வெட் 84 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 75 ரன்கள் குவித்தார். இந்திய மகளிர் அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய பூஜா வஸ்த்ரேக்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி
பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீட் கவூர் 63 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 71 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து மகளிர் அணியில் சிறப்பாக பந்து வீசிய லியா தாஹுஹு மற்றும் அமெலியா கெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
போட்டியின் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர். ஐசிசி உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக நியூசிலாந்து மகளிர் அணியிடம் இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
தோல்வி சம்பந்தமாக பேசிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆரம்பத்திலேயே சிலதை கட்டைகள் பறி போன காரணத்தினால் எங்களால் இறுதி வரை நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. இன்று எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பணியை மிகச் சிறப்பாக செய்தார்கள். எங்கள் அணியின் பேட்டிங்கை இன்னும் சற்று வலுப்படுத்த வேண்டும். இனி அதற்கான பணிகள் நடைபெறும் என்றும் கூறினார்.
தற்பொழுது புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 2 போட்டியில் விளையாடி 2 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து மகளிர் அணியும் மூன்றாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியும் உள்ளனர். நான்காவது இடத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் ஐந்தாவது இடத்தில் இந்திய மகளிர் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.