இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக்கு கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஸ் செய்தது.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி முன்னிலை
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்சல் 81 ரன்கள் எடுக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு கில் 90 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அஜாஸ் படேல் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் அரை சதம் அடித்து 51 ரன்கள் எடுத்தார். அந்த அணி 174 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ரவீந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
நியூசிலாந்து வரலாற்று வெற்றி
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இந்திய அணி வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து தனி ஒரு வீரராக போராடிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் வெற்றிக்கனவும் தகர்ந்தது. இந்திய அணி 121 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அஜாஸ் படேல் ஆறு விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : ஏற்கனவே ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சீங்க.. இப்போ இந்த ஷாட் நமக்கு தேவையா.? அவரு தெளிவா பிளான் பண்றாரு – பிரபல வர்ணனையாளர் விளாசல்
இந்திய அணியின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை ஒயிட் வாஸ் ஆனது கிடையாது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக உள்நாட்டில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகியிருக்கிறது.