நியூசிலாந்து தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தட்டுத் தடுமாறி வெற்றி பெற்று, இந்த தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை தற்காலிகமாக சமநிலையில் வைத்திருந்தன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிறப்பான தொடக்கம்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 34 பந்துகளில் 56 ரன்கள், டிம் ராபின்சன் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் டேரில் மிட்சல் சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் மற்றும் மேத்யூ போர்ட் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் கடைசிக்கட்ட போராட்டம்
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேல் வரிசையில் அலிக் ஆதனஸ் 23 பந்துகளில் 31 ரன்கள், அக்கியூம் அகஸ்டி 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்தது.
இதையும் படிங்க : 71 ரன் 10 விக்கெட்.. வித்தியாசமாக சரிந்த தென் ஆப்பிரிக்கா.. பாகிஸ்தான் தொடரை வென்று அசத்தல்
இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்த ரொமாரியோ செப்பர்டு 34 பந்துகளில் 49 ரன்கள், பேட்டிங் வரிசையில் பத்தாவதாக வந்த ஷமார் ஸ்ப்ரிங்கர் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடுமையாக போராடினார்கள். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட, மீதமருந்த விக்கெட்டுகளை இழந்து, 168 ரன்கள் எடுத்து பரிதாபமாக ஒன்பது ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்றது. இரண்டாவது டி20 போட்டியை இரண்டு ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, மூன்றாவது டி20 போட்டியிலும் அதே பரிதாப முடிவு கிடைத்திருக்கிறது.






