207 ரன்.. கடைசி 6 பந்தில் 16 ரன்.. நியூசி வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் சுவாரசிய முடிவு.. 2வது டி20

0
60
WI

இன்று நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது. மேலும் இது கடைசிப் பந்து வரையில் ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான போட்டியாகவும் இருந்தது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி ஆச்சரியத்தை கொடுத்தது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து ரன் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் ராபின்சன் 25 பந்தில் 39 ரன், டெவோன் கான்வே 24 பந்தில் 16 ரன், ரச்சின் ரவீந்தரா 15 பந்தில் 11 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய சாப்மேன் அதிரடியாக அரைசதம் அடித்து வெறும் 28 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேரில் மிச்சல் 14 பந்தில் ஆட்டம் இழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

6 பந்தில் 16 ரன்

இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேல் வரிசையில் அலிக் ஆதனஸ் 25 பந்தில் 33 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 26 பந்தில் 24 ரன்கள், முன்னாள் கேப்டன் ரோமன் பவல் வெறும் 16 பந்தில் அதிரடியாக 6 சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து கீழ் வரிசையில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் மேத்யூ போர்ட் இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடினார்கள். வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் முதல் மூன்று பந்தில் போர்டு இரண்டு பவுண்டரி அடித்தார் இதில் ஒரு பந்து நோ-பால் ஆக அமைந்தது. அடுத்து ஒரு பந்தில் சிங்கிள் எடுத்தார். இதனால் கடைசி மூன்று பந்தில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க : தாங்க முடியலப்பா.. இன்றும் கம்பீர் செய்த காரியம்.. நொந்து போன இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இந்த நிலையில் நான்காவது பந்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் 16 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே வந்தது. மேத்யூ போர்டு ஆட்டம் இழக்காமல் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியை வென்றது. கடைசி மூன்று பந்தில் ஏற்பட்ட நெருக்கடியால் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தற்காலிகமாக வெஸ்ட் இண்டீஸ் இழந்தது.

- Advertisement -