மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி ஒன்றில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 56 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்து இந்திய அணியின் அரையிறுதி கனவை முடித்து வைத்தது.
இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானன் மோதிக்கொண்ட போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் பேட்டிங்கில் கோட்டை விட்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது.
பந்துவீச்சில் நம்பிக்கை தந்த பாகிஸ்தான்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 28, புரூகி ஹால்லிடே 22 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும் கூட 20 ஓவர்களில் அந்த அணியால் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த போட்டி பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் நஸ்ரா சந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். ஓவருக்கு 6 ரன் ரேட்டுக்கும் கீழாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை மடக்கியதால் இந்திய தரப்பில் நம்பிக்கை உருவானது.
பேட்டிங்கில் மொத்தமாக ஏமாற்றிய பாகிஸ்தான் அணி
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணி 52 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை 9 ஓவர்களில் இழந்திருந்தது. இந்த இடத்தில் கூட இந்திய அணிக்கு அரையிறுதிக்கான நம்பிக்கை இருந்தது. அடுத்து 4 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 56 ரன்னில் சுருண்டது.
இதையும் படிங்க : ஓபனா சொல்றேன்.. டீம் இந்தியால இவங்க 2 பேர் இருந்தா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் – நியூசி ரச்சின் ரவீந்திரா பேட்டி
நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி இடம் பெற்று இருக்கும் இந்த குழுவில் இருந்து ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததால் பரிதாபமாக முதல் சுற்றோடு வெளியேறுகிறது.






