16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சரித்திரம்  தென்.ஆ-வை வீழ்த்தியது நெதர்லாந்து.. உலக கோப்பையில் அடுத்தடுத்து அப்செட்!

0
2026
Netherlands

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி டாஸ் போடப்படுவதற்கு முன்பு மழை பெய்த காரணத்தினால் 43 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி தனது முதல் ஏழு விக்கெட்டுகளை 140 ரன்களுக்கு இழந்துவிட்டது. அந்த அணி மேற்கொண்டு 200 ரன்கள் சேர்த்தால் பெரிய விஷயம் என்பதாகத்தான் இருந்தது.

இந்த நிலையில் பேட்டிங்கில் ஏழாவதாக வந்த கேப்டன் எட்வார்ட்ஸ் கீழ் வரிசை பேட்ஸ்மேன்னுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெதர்லாந்து அணியை மீட்டார்.

இவருடன் சேர்ந்த வான்டர் மெர்வ் 19 பந்துகளில் 29 ரன்கள், ஆரியன் தத் ஆட்டம் இழக்காமல் 9 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க, இன்னொரு முனையில் கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உடன் 78 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

43 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து அணி 245 ரன்கள் சேர்த்தது. லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா மற்றும் மார்க்கோ யான்சன் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஜெரால்ட் கோட்சி மற்றும் கேசவ் மகராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. குயிண்டன் டி காக் 20, டெம்பா பவுமா 16, வான்டர் டேசன் 4, எய்டன் மார்க்ரம் 1, ஹென்றி கிளாசன் 28, மார்க்கோ யான்சன் 9, ஜெரால்ட் கோட்சி 22, கேசவ் மகராஜ் 40, ரபாடா 9, லுங்கி நிகிடி 7* என ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்து அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் மூன்று விக்கெட்டுகள், பால் வான் மீகரன், வான்டர் மெர்வ் மற்றும் பாஸ் டி லீட் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இதே நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, அந்த அணியை அரையிறுதிக்கு செல்ல விடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுதும் நெதர்லாந்து தந்த இந்த தோல்வி தென் ஆப்பிரிக்காவை அரையிறுதிக்கு செல்ல விடாமல் தடுக்குமா என்று பார்க்க வேண்டும்.

நெதர்லாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நமிபியா அணிக்கு எதிராகவும், இரண்டாவது வெற்றியை 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராகவும் பெற்றிருந்தது.

தற்பொழுது 16 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது மூன்றாவது வெற்றியை, முதன்முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டிற்கு எதிராக பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.