இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த மாத இறுதியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு அதிரடியாக ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்கி இருக்கிறது.
இலங்கை அணி இந்த மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் நவம்பர் 27ஆம் தேதி துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பான நகர்வு
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இலங்கை அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரை சிறப்பாக எதிர் கொள்வதற்காக, முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான 48 வயதான நீல் மெக்கன்சியை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் பொறுப்புக்கு தற்காலிகமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது.
இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து 10 பேர் கொண்ட குழு ஒன்று இந்த மாதம் 11ஆம் தேதி புறப்பட்டு தென் ஆப்பிரிக்கா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் நீல் மெக்கன்சி இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர் மொத்தம் 2000 முதல் 2009 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணிக்கு 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3253 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்திருக்கிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் கிரேம் ஸ்மித் உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 415 ரன்கள் குறித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு ஏற்பட்ட சாதகம்
தென் ஆப்பிரிக்கா அணி உள்நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்றாலே தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இதையும் படிங்க : மில்லர் இல்லை.. ஐபிஎல் ஏலத்தில் 24 வயதான தென் ஆப்பிரிக்க பையன்.. பெரிய விலைக்கு போவார் – தினேஷ் கார்த்திக் கணிப்பு
இந்த நிலையில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று ஒன்றை டிரா செய்தால் கூட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பெரிய சாதகமாக அமையும். மேலும் இலங்கையணி உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளையும் வென்றால், இந்தியாவுடன் இணைந்து இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும். இப்போதைக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் நகர்வை மேற்கொண்டு இருப்பது, இந்திய அணிக்கும் சாதகமான நிலையை உருவாக்கி இருக்கிறது!






