சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி மூன்றாவது நாளில் முதல் ஒரு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தினால் அழிந்து வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் வெளியில் சென்று டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அணிகள் தங்களை சரியாக தயார் செய்யாத காரணத்தினால் தான் டெஸ்ட் கிரிக்கெட் அழிகிறது என்று நாசர் ஹுசைன் அணிகளின் மேல் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்த காரணத்தினால்தான் சரியான போட்டித் தன்மை இல்லாமல் போகிறது என்றும், வெஸ்ட் இண்டீஸ் மட்டுமே இதை செய்யவில்லை இங்கிலாந்தும் வெளியில் சென்று விளையாடும் பொழுது இதே கதைதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் எனவே இந்த அணிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “போட்டி நடைபெற்ற அந்த இரண்டு நாட்களில் நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அவர்களுடைய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டெ அஸ்தமனத்தில்தான் இருக்கிறது. மேலும் அவர்களிடம் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் பந்து வீசக்கூடியவர்களாக இல்லை. அவர்கள் அரைவேக்காட்டு வீரர்களாக இருந்தார்கள்.
உங்களுக்கு கண்டிஷன் எதிராக இருக்கிறது, நீங்கள் டாஸ் வெல்லவில்லை, நீங்கள் டெஸ்ட் தொடருக்கு சரியான முறையில் தயாராகவும் இல்லை, ஆனால் போட்டியில் இப்படி ஒரு முடிவு வந்ததும் டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்.
மேலும் இந்த கதை வெஸ்ட் இண்டீஸ்க்கு மட்டும் நடக்கவில்லை. இங்கிலாந்து அணியும் வெளியில் சென்று விளையாடும் பொழுது அந்த கண்டிஷனுக்கு சரியான முறையில் தயாராகவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. இதே கதைதான் இங்கிலாந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு போகும்போது நடக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பையை தந்த.. ரோகித் செய்த அந்த மாற்றம்.. கம்பீர் அனுமதிப்பாரா?.. முன்னிற்கும் முக்கிய சவால்
எனவே இவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பான முறையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தயாராகி சென்று விளையாட வேண்டும். இல்லையென்றால் ஒரே அடியாக டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.