ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்ஷித் ராணாவை, சிவம் துபேக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவை தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்தார். டாஸில் தோல்வியடைந்து முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி, எட்டாவது ஓவரில் 49/5 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
ஹர்ஷித் ராணாவை 7வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பியது. ஹர்ஷித் அபாரமான பேட்டிங் செய்து 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அணியை நெருக்கடியிலிருந்து மீட்டார். ஆனால் இதன் காரணமாக துபே ஐந்து ஓவர்களுக்கும் குறைவாக எஞ்சிய நிலையில் 8வது இடத்தில் பேட் செய்ய வந்தார். துபே வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இது குறித்து பேசிய சடகோபன் ரமேஷ், “நன்றாக சமைப்பவனை டிரைவராக்க முடியாது. நல்ல டிரைவரை சமையல்காரனாக்க முடியாது. அதேபோல், ஒவ்வொரு வீரரின் பலம் மற்றும் அணியில் அவரது முதன்மை பங்கை கவனத்தில் கொண்டு, அவர்களிடமிருந்து சிறந்ததை பெற முயல வேண்டும்.
அவர்கள் கூடுதலாக ஏதாவது செய்தால் அது நல்லது. ஆனால் அவர்களின் இரண்டாம் திறமை முதன்மை பங்காக மாறக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். இந்திய அணியில் அது நடப்பதாக தெரிகிறது. பேட் செய்யக்கூடிய பவுலர் முதலில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேபோல் பந்துவீசக்கூடிய பேட்ஸ்மேன் முதலில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இதில் அணி நிர்வாகம் தெளிவாக இருக்க வேண்டும். இங்குதான் இந்தியா தவறு செய்கிறது என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்தார். ஹர்ஷித் பந்துவீச்சில் சிரமப்பட்டு, இரண்டு ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதை தொடர்ந்து பேசிய, “பேட்டிங் வரிசையில் மியூசிகல் சேர் ஆடுவதை இந்தியா நிறுத்த வேண்டும். 160, 170 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற பெரிய வாய்ப்பு இருந்திருக்கும். முந்தைய போட்டியில் 3வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவில்லையா? அவர் ஆட்டமிழக்கவும் இல்லை. பிறகு ஏன் சஞ்சு சாம்சனை 3வது இடத்திற்கு அனுப்பினீர்கள்”.
இதையும் படிங்க: 27 ரன் 2 விக்கெட்.. ஒயிட் வாஷ் ஆன இங்கிலாந்து.. பேட்டிங்கில் கலக்கிய நியூசி பவுலர்கள்.. 3வது ஒருநாள் போட்டி
“அவர் தொடக்க வீரராக இருந்து 5வது இடத்திற்கு சென்றார். இப்போது 5லிருந்து 3க்கு. இதனால் அனைவரும் அடுத்து யார் பேட் செய்ய போகிறார் என்று ஒருவரையொருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திலக் வர்மா ஆசிய கோப்பை இறுதியை 4வது இடத்தில் வென்று கொடுத்தார், நீங்கள் அவரை 5வது இடத்திற்கு நகர்த்தினீர்கள்.” என்று சடகோபன் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.