தமிழ்நாடு பிரீமியர் லீக் : அபார சதம் விளாசி மரண காட்டு காட்டிய முரளி விஜய் !

0
1059
Murali Vijay

நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய திருச்சி அணியை சேர்ந்த முரளி விஜய், 66 பந்துகள் மட்டுமே சந்தித்து 121 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2022ம் ஆண்டுக்கான தொடரின் 19 ஆவது போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் பலப் பரிட்சை மேற்கொண்டன. இப்போட்டி கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹீல் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு துவக்கத்தில் சில ஓவர்கள் நன்றாக அமைந்தது. 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த நெல்லை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க சஞ்சய் யாதவ் மற்றும் பாபா அப்ரஜித் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த பின்பும் ஆட்டத்தில் மந்தநிலை ஏற்படுத்தாமல், துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி திருச்சி அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக துவம்சம் பறக்கவிட்டது. இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திருச்சி பந்து வீச்சாளர்கள் திக்கு முக்காடினர். இவ்விரு வீரர்களும் அரைசதம் கடந்த பிறகு, ஆட்டம் மேலும் சூடுபிடிக்க துவங்கியது.

நான்காவது வீரராக களம் இறங்கிய சஞ்சய் யாதவ் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த இவர் 55 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 9 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டர்கள் அடங்கும். இவருக்கு பக்கபலமாக இருந்த பாபா அப்ரஜித் 48 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார் இவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை அடித்திருந்தார். மூன்றாவது விக்கெட்டிற்க்கு இந்த ஜோடி 207 ரன்கள் சேர்த்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. 20 ஓவர்கள் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரியத் துவங்கின. துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதும் மறுமுனையில் ஒவ்வொரு வீரர்களாக சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல், திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி சந்தித்தது.

- Advertisement -

38 வயதான முரளி விஜய் 66 பந்துகளில் 121 ரன்கள் விளாசி, ஒற்றை நம்பிக்கையாக இருந்து வந்தார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஒரே இன்னிங்ஸில் 12 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் ஏழு பவுண்டர்களையும் இவர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் ஐபிஎல் அணிகளில் இடம்பெற முடியாமல் தவித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இத்தகைய சூழலில் தனது அதிரடியான சதம் மூலம் இன்னும் பழைய ஃபார்மில் இருக்கிறேன் என காண்பித்திருப்பது இவரது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை குறிக்கிறது.

டிஎன்பிஎல் தொடரின் புள்ளி பட்டியலை பொருத்தவரை, நடைபெற்ற ஆறு போட்டிகளில் அனைத்தையும் வென்று 12 புள்ளிகளில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதல் இடத்தில் அசைக்க முடியாமல் நீடிக்கிறது. அதற்கு அடுத்ததாக 8 புள்ளிகளுடன் மதுரை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.