சபதத்தை நிறைவேற்றி 9 வருடம் கழித்து பெற்றோர்களை சந்தித்த மும்பை இன்டியன்ஸ் வீரர் – நெகிழ்ச்சி சம்பவம்

0
83
Kumar karthikeya

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவாக அமைந்தது. அவர்கள் ஏலத்தில் இஷான் கிஷான், ஜோப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட் ஆகிய மூவருக்கும் 31 கோடி செலவழித்ததால், ஒரு வலிமையான அணியை உருவாக்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்களுக்குக் கிடைத்தது புள்ளிப்பட்டியலில் கடைசி இடமே!

இதற்கு நடுவில் ஐபிஎல் தொடர் நடுவிலேயே சில வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட, பலகீனமான மும்பை அணிக்குச் சிறப்பான இரண்டு வீரர்கள் கிடைத்தார்கள். ஒருவர் செளத் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ்; இன்னொருவர் மத்தியப்பிரதேச அணிக்காக விளையாடும் மர்ம சுழலர் குமார் கார்த்திக்கேயா. இவர்கள் இருவரும் மில்ஸ், அர்சத் கான் இருவருக்கும் மாற்றாக மும்பை இன்டியன்ஸ் அணிக்குள் வந்தார்கள்!

- Advertisement -

இதில் குமார் கார்த்திக்கேயாவின் கதை ரொம்ப வலியானது போராட்டமானது. தற்போது 25 வயதாகும் குமார் கார்த்திக்கேயாவின் சொந்த ஊர் உத்திரப்பிரதேசம் கான்பூர் ஆகும். ஏழ்மையின் காரணமாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்று இவர் தனது 15வது வயதிலேயே கான்பூரை விட்டு வெளியேறிவிட்டார்.

அடுத்து பரத்வாஜ் என்ற பந்துவீச்சாளரின் பயிற்சியின் கீழ் பந்துவீச்சு பயிற்சியைப் பெற்று வந்தார். தங்குவதற்கு இடமில்லாததால் இரவு நேரம் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு, பகலில் பந்துவீச்சு பயிற்சி வருவாராம்.

இப்படி பரஜ்வாஜ் அவரின் பயிற்சியின் கீழ் இருந்த குமார் கார்த்திக்கேயாவின் நிலைமையை அறிந்த, பயிற்சியாளர் அவரைத் தன்னோடு வைத்துக்கொண்டுள்ளார். அந்த நாளில் அவரது சமையல்காரர் குமார் கார்த்திக்கேயாவிற்கு மதிய உணவளிக்க, தட்டில் உணவைப் பார்த்த குமார் கார்த்திக்கேயா அழுதவிட்டாராம். பின்புதான் வறுமையால் அவர் பல ஆண்டுகளாக மதிய உணவையே சாப்பிட்டதில்லை என்று பயிற்சியாளர் பரத்வாஜிற்குத் தெரிந்திருக்கிறது.

- Advertisement -

பின்பு அவர் தனது நண்பரான இன்னொருவரிடம் இவரைப் பயிற்சிக்கு அனுப்பி, அங்கிருந்து டிவிசன் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றவர், 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்த, மத்தியப்பிரதேச அணியில் 2018ஆம் ஆண்டு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. பின்பு மத்திய பிரதேச அணிக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் குமார் கார்த்திக்கேயா விளையாடினார்!

ஓரளவு வாய்ப்புகள் கிடைத்த பின்பும் குமார் கார்த்திக்கேயா தனது பெற்றோர்களைப் பார்க்க கடந்த ஒன்து வருடங்களா கான்பூர் செல்லவில்லை. இன்னும் ஏதாவது பெரிதாய் சாதிக்காமல் போகக்கூடாது என்ற முடிவிலேயே இருந்தார்!

இந்த நிலையில்தான் மும்பை அணியில் அடிப்படை விலை இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்ட இடக்கை மிதவேகப் பந்துவீச்சாளர் அர்சத் கான் பயிற்சியின் போது காயமடைய, அவருக்கு மாற்றாக குமார் கார்த்திக்கேயா இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இவர் நான்கு போட்டிகளில் 7.84 என்ற எகானமியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரின் எதிர்காலம் மும்பை அணியில் பிரகாசமாகவே இருக்கிறது!

இந்த வாய்ப்பிற்குப் பிறகு ஒன்பது வருட சபதத்தை விட்டு பெற்றோரை சந்திக்க இருப்பதாக ஐபிஎல் தொடரில் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது சென்று பெற்றோரை சந்தித்திருக்கிறார் குமார் கார்த்திக்கேயா!