கிரிக்கெட் சீசன் தற்போது களைகட்டி உள்ள நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பல வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும்.
இதனால் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடாத வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
ஸ்டார் பவுலருக்கு காயம்:
மும்பை அணி கடந்த நான்கு சீசன்களாக ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை. இந்த தருணத்தில் எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற உத்வேகத்தில் அம்பானி குடும்பத்தினர் ஸ்டார் வீரர்களை வாங்கி குவித்து இருக்கிறார். ஆனால் தற்போது மும்பை அணி மிகவும் நம்பி இருந்த ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை அணியில் பலமான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் போதிய சுழற் பந்துவீச்சாளர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக இருந்தது. இதனை போக்கும் விதமாக ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லாஹ் கசன்ஃபர் என்ற வீரரை மும்பை அணி நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
4 மாதம் ஓய்வு தேவை:
இந்த சூழலில் அல்லாஹ் கசன்பர் ஐல்டி 20 தொடரில் எம் ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அல்லாஹ் கசன்பர் சாம்பியன் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதேபோன்று ஐபிஎல் 2025 சீசனிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய காயம் சரியாக நான்கு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் மும்பை அணி மாற்று வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே சாம்பியன்ஸ் கோப்பையில் பும்ரா விளையாட வில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடருக்கு முன்பு காயத்திலிருந்து திரும்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அல்லா கசன்பர் இல்லாத நிலையில் மும்பை அணியில் பும்ராவும் விளையாடவில்லை என்றால் ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.






