ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் குறித்து மும்பை அணியின் நட்சத்திர பவுலர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளும் மிக வலுவாக இருப்பதால் இன்னும் சில போட்டிகளில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே நாளை நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.
கடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது இளம் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்சி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து பலமான குஜராத் அணியின் பந்து வீச்சுக்கு எதிராக தனது முத்திரையை பதித்தார். பலமான குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் புதிய உத்வேகத்துடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் வைபவ் குறித்து மும்பை அணியின் நட்சத்திர பவுலர் ட்ரென்ட் போல்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் உலகெங்கிலும் உள்ள பிரான்சிஸ் தொடர்களில் விளையாடி கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற அபாயகரமான வீரர்களுக்கு எதிராக பந்துவீசி உள்ளேன். இந்தப் போட்டிகளில் வரும் அனைத்து தரத்திலும் பலமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் வீசி உள்ளேன். 14 வயது சிறுவனை பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று சொல்லாத அளவிற்கு நான் கவனமாக இருப்பேன் என்று நம்புகிறேன். ஆனால் அச்சமற்றவராகவும் அபாரமான ஃபார்மில் இயங்கும் ஒரு பையனை எதிர்கொள்வது என்பது சவாலாக இருக்கும்.
இதையும் படிங்க:2026 ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவீர்களா.? வர்ணனையாளரின் கேள்விக்கு தோனியின் நகைச்சுவையான பதில்
ஒரு இளம் குழந்தையின் தரம் அந்த நாள் இரவு உலகம் முழுவதும் கண்டது. இந்த தொடரின் அழகு என்னவென்றால் எல்லா வீரர்களும் வெளியே வந்து தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை இரண்டு கைகளாலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுவே சிறப்பான விஷயமாகும்” என்று பேசி இருக்கிறார். வைபவ் முகமது சிராஜ், ரஷித் கான், இசாந்த் சர்மா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியிருக்கும் நிலையில் நாளை தீபக்சகார், போல்ட் மற்றும் பும்ரா போன்ற பவுலர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வமாக இருக்கும்.