90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில்… நடராஜன் மட்டுமே செய்திருந்த சாதனையை சமன் செய்த முகேஷ் குமார்

0
486

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் அமைந்துள்ள பிரயன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது .

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு நாள் போட்டி தொடர்களின் போதும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆன முகமது சிராஜ் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக இந்திய அணியின் வாய்ப்பிற்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது.சிறப்பாக பந்து வீசிய அவர் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய முகேஷ் குமார் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கினார் முகேஷ் குமார் .

- Advertisement -

இந்தப் போட்டியில் அவர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் மூன்று ஓவர்கள் பந்து வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியதன் மூலம் ஒரு சுற்று பயணத்தில் டெஸ்ட் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 தொடர்களில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

இந்தியாவின் 90 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரே சுற்றுப் பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான இரண்டாவது வீரர் முகேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2020-21 ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது தமிழக வீரரான டி .நடராஜன் t20 ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடராஜனின் சாதனையை சமன் செய்திருக்கிறார் முகேஷ் குமார் .