ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் கொடூரமான தோல்வியை பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி ரஜத் பட்டிதர், பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை சேர்த்தது. இதன்பின் வந்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி சாதனை
இதன் காரணமாக ஆர்சிபி அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் வெற்றியை ஆர்சிபி பெற்றிருக்கிறது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு தோனியின் ஆட்டம் மட்டுமே ஒரு ஆறுதல்.
கடைசி நேரத்தில் வந்த தோனி 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதனால் தோனியின் ஃபினிஷிங் பார்த்த மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த இன்னிங்ஸில் 30 ரன்களை விளாசியதன் மூலமாக தோனி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
அதிக ரன்கள் பட்டியல்
இந்த போட்டியில் 19 ரன்கள் எடுத்ததன் மூலமாகவே சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா சாதனையை தோனி முறியடித்துள்ளார். சென்னை அணிக்காக 236 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4,699 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்களை குவித்திருக்கிறார். தொடர்ந்து டூ பிளசிஸ் 2,721 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2,433 ரன்களுடன் 4வது இடத்திலும், அம்பாதி ராயுடு 1,932 ரன்களுடன் 5வது இடத்திலும் இருக்கிறார்கள். இதனால் தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி வசமே இருக்கிறது.






