இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்றைய இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி 4-வது கோப்பையை கைப்பற்றியது ஒரு பக்கம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, மறுபக்கம் ராகுல் திருபாதியிடம் எம் எஸ் தோனி நடந்துகொண்ட விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காயம் ஒரு பக்கம் இருந்தாலும் முழு அர்ப்பணிப்போடு வந்து விளையாடிய ராகுல் திருபாதி
நேற்று சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், ராகுல் திருபாதிக்கு கால் தொடையில் காயம் ஏற்பட்டது. பீல்டிங் செய்து கொண்டிருந்த ராகுல் பந்தை தடுக்கும் முயற்சியில் ஹேம்ஸ்ட்ரிங் (தொடைப்பகுதியில் உள்ள சதையில் ஏற்படும் காயம் ) காயத்திற்கு ஆளானார். அதன் பின்னர் அவரால் சரியாக நடக்க கூட முடியவில்லை. உடனடியாக மருத்துவ குழு அவருக்கு உரிய சிகிச்சை அளித்தது.
சென்னை அணி பேட்டிங் செய்து முடித்ததும், பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கி விளையாட தொடங்கியது. ஒரு கட்டத்தில் விக்கட்டுகள் சரசரவென அடுத்தடுத்து வீழ, கடைசியாக ராகுல் திருபாதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாமல் பேட்டிங் விளையாட வந்தார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் குவித்து அவுட் ஆனார். நேற்று அவர் பேட்டிங் விளையாட வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை என்றாலும், முழு அர்ப்பணிப்போடு அவர் வந்த விளையாடிய விதம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
அவருடைய அர்ப்பணிப்பை போற்றும் வகையில் மகேந்திர சிங் தோனி அவர் அவுட்டான அடுத்த நொடியே அவரிடம் சென்று, தோளில் தட்டிக் கொடுத்து அவரை பாராட்டி வழியனுப்பி வைத்தார். மகேந்திர சிங் தோனி செய்த இந்தச் செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்த அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
4-வது முறையாக பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
நேற்று நடந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக டுப்லஸ்ஸிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் வந்த விளையாடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் மிக அற்புதமாக விளையாடினாலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 27 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கில் மற்றும் ஐயர் அரைசதம் குவித்தனர்.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது டு பிளசிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷால் பட்டெலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.