இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் வென்ற முகமது சிராஜ் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டு என சமன் செய்தது.
அட்டகாசப்படுத்திய சிராஜ்
தற்போது நடந்து முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக முகமது சிராஜ் வந்திருக்கிறார்.
மேலும் இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரண்டிலுமே ஒரு இன்னிங்ஸில் அவர் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கைப்பற்ற வேண்டிய நான்கு விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றினார். அதே சமயத்தில் பீல்டிங் செய்யும் பொழுது ஹாரி புரூக் 32 ரன்னில் தந்த கேட்ச் வாய்ப்பை எல்லைக்கோட்டை தொட்டு சிக்ஸராக மாற்றி விட்டார். இதன்பிறகு ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க போட்டி பரபரப்பாக மாறியது. தற்போது இதற்கு பரிகாரம் செய்திருக்கிறார்.
நம்பிக்கை வைத்தேன்
இதுகுறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது ” நான் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும் என்பது குறித்துதான் யோசித்து கொண்டு இருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் புரூக் கேச்சை பிடித்து பிறகு எல்லைக்கோட்டை மிதிப்பேன் என நான் நினைக்கவே இல்லை. அதுதான் போட்டியை இவ்வளவு தூரம் கொண்டு வந்த தருணம் என்று நினைக்கிறேன். எனவே அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க : கடைசி திக் திக் 8 ரன்.. சிங்கமாய் சீறிய சிராஜ்.. ஓவலில் வரலாறு படைத்த இந்தியா.. இங்கிலாந்து அணி தோல்வி
” உண்மையில் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த போட்டியில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இறுதியில் இந்த முடிவை பார்ப்பது சிறந்தது. இன்று காலையில் நான் என்னுடைய மொபைலில் நம்பிக்கை என்ற பொருள் தரும் வகையில் வால்பேப்பர் டவுன்லோட் செய்து வைத்தேன். இந்திய அணிக்கு இன்று விக்கெட் வீழ்த்தி வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். இறுதியாக களத்தில் வந்து அதை செய்து முடித்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






