ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான தோல்வி ஆட்டத்தில் சதம் அடித்த கேப்டன் திலக் வர்மாவின் பேட்டிங் அணுகுமுறை குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
தோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 314 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்தியா ஏ அணி 265 ரன்களுக்கு ஆட்டமிழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மா 149 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் சர்மா 70 ரன்கள் எடுத்த போதிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதால் இந்தியா ஏ அணி ஒரு கட்டத்தில் 129 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் சரிந்தது. மெதுவான பிட்ச் தன்மைக்கு ஏற்ப பேட்டர்களால் வேகமாகத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “திலக் ஒரு இருமுனைக் கத்தி போன்றவர். அவர் அந்த வேகத்தில் பேட்டிங் செய்து அணி தோற்கும்போது, அவர் எப்போதும் குற்றம் சாட்டப்படுவார். ஆனால் என்னிடம் கேட்டால், கடைசி வரை களத்தில் நின்று நமக்கு சிறிது நம்பிக்கை அளித்த அவரது முயற்சிக்கு முழு மதிப்பெண் கொடுப்பேன். ஆனால் ஆம், அது மறக்க முடியாத சதம் அல்ல. அணி தோற்கும்போது அது முக்கியமில்லை.”
தொடர்ந்து பேசிய அவர் “நான் அவரை அதிகம் குற்றம் சொல்ல மாட்டேன். மற்ற பேட்டர்களும் ரன்கள் எடுத்திருக்கலாம் அல்லவா? மற்றொரு பேட்டரும் அரைசதம் அடித்திருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம். திலக் எப்போதும் இந்த டெம்ப்ளேட்டை பின்பற்றி கடைசியில் ஃபினிஷ் செய்வார். இந்த முறை அது நடக்கவில்லை.”
இறுதியாக அவர் “நமது பேட்டர்கள் மெதுவான பிட்ச்களில் அம்பலமாகிறார்கள். நாம் ஐபிஎல் மற்றும் டி20 விளையாடுகிறோம், அங்கே இதுபோன்ற பிட்ச்கள் இல்லை. பந்து சீரான வேகத்தில் வரவில்லை. நீங்கள் சற்று காத்திருந்து விளையாட வேண்டும். பேட்டர்களால் மெதுவான பிட்ச்களில் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் 313 ரன்கள் எடுத்திருக்கக் கூடாது என்றும் நான் நினைக்கிறேன். அந்த பிட்ச்க்கு நாம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்று ஆரம்பித்து பாகிஸ்தான் 313 ரன்கள் எடுத்திருக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.