இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது உலக கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் பவுலிங் குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
மிகவும் வலுவான அணியாக கருதப்பட்ட இந்திய அணி t20 உலக கோப்பையில் தென்னாபிரிக்க அணியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்திருக்கிறது. எனவே அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். மேலும் ஒரு சில முடிவுகளைப் பொறுத்து இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு அமையும்.
தென்னாபிரிக்க போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமானதாக அமைந்தது. அதிலும் ஆல் ரவுண்டராக கருதப்படும் சிவம் தூபே இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் அவரது பவுலிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சிவம் தூபே பிரெவிஸ் களத்தில் இருந்த போது வைட் யார்க்கர் பந்துகளை அதிகமாக வீசினார். தனது பந்து வீசும் திட்டத்தின் மூலமாக அவர் தற்காப்புடன் இருப்பதாக காட்டினார். 10வது ஓவரில் யாரும் தற்காப்போடு பந்து வீசுவதில்லை. என்னை பொருத்தவரை அந்த நேரத்தில் அட்டாக் செய்து எடுக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே டூபே ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே தவிர ஆல்ரவுண்டர் கிடையாது. நமக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆல்ரவுண்டர் தேவையில்லை. அவர் எப்போதாவது ஒரு வித்தியாசமான விக்கட்டை வீழ்த்தலாம். ஆனால் எப்போதும் ரன்களை வாரி வழங்குவார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்கள் கூட அவரால் விட்டுக் கொடுக்க முடியும்” என்று பேசி இருக்கிறார்.






