இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் வளர்ந்து வரும் குழந்தைகள் பும்ராவை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் இருவரையும் தாக்கி பேசுவது போல பதிவிட்டு இருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா முதல் ஸ்பெல் சரியாக அமையவில்லை. அதே சமயத்தில் இரண்டாவது ஸ்பெல்லில் வந்து ஒரு விக்கெட் மற்றும் மூன்றாவது ஸ்பெல்லில் இரண்டு விக்கெட் என மொத்தம் மூன்று விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டத்துக்குள் வைத்திருக்கிறார்.
ஹெட்டை தூக்கிய பும்ரா
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 200 ரன்களுக்கும் மேல் தாண்டி வலிமையான நிலையில் இருந்தது. இந்த நிலையில் லபுசேன் 72 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து திரும்ப பந்துவீச்சுக்கு வந்த பும்ரா இந்திய அணிக்கு தொடர்ந்து தலைவலியை கொடுத்துக் கொண்டு வரும் ஹெட்டை ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் செய்து வெளியே அனுப்பினார். முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றிய பொழுதும் அவர் அதை பெரிய ஆக்ரோஷமாக கொண்டாடவில்லை.
சிராஜின் ரோல் மாடல் விராட் கோலி
அதே சமயத்தில் இந்திய வீரர் சிராஜ் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வழக்கமாக வைத்திருக்கிறார். ஹெட்டுக்கு எதிராக இந்த தொடரில் அவரது ஆக்ரோஷமான கொண்டாட்டம் பெரிய சர்ச்சையாக மாறி அபராதத்தில் முடிந்தது. மேலும் அவர் இந்த விஷயத்தில் விராட் கோலியை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரையும் மறைமுகமாக தாக்கும் விதமாக தற்பொழுது முகமது கைப் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : உடல் ரீதியான மோதல்.. விராட் கோலி ஆட தடை விதிக்க வாய்ப்பு.. ஐசிசி விதி என்ன கூறுகிறது?
இதுகுறித்து முகமது கைஃப் தனது பதிவில் “ஆஸ்திரேலியாவின் முக்கியமான வீரர் ஹெட் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா எப்படி கொண்டாடுகிறார்? என்று பாருங்கள். எந்த மிகையான கொண்டாட்டமும் இல்லை. அவர் எந்த கோபமும் இல்லாமல் ஒரு புன்னகையுடன் இருக்கிறார். குழந்தைகள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களது ரோல் மாடலை சரியானவராக தேர்ந்தெடுகள்” என்று கூறி இருக்கிறார்.






