இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை விட சஞ்சு சாம்சன் சரியானவராக இருப்பார் என அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இன்று சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முகமது கைஃப் இப்படியான கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேனாக தற்பொழுது மிகவும் முன்னேறி விட்டார். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் உடன் மக்கள் உணர்வு ரீதியாக இணைந்து இருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கிறார். காபா மற்றும் செஞ்சூரியனில் அவர் சதம் அடித்திருக்கிறார். இதை உண்மையில் யாரும் மறக்க முடியாது. இது மிகப்பெரிய விஷயம்”
“இப்படி இருந்தாலும் கூட ரிஷப் பண்ட்டை விட பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மிகவும் முன்னேறி விட்டார். அவர் கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக வேடிக்கையாக ஒரு சதம் அடித்தார். மேலும் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் அதிகமாக அடிக்கிறார். அவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமை மிகச் சிறப்பாக மாறி இருக்கிறது”
“சஞ்சு சாம்சன் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அவருக்கு இரண்டாவது வாய்ப்பு 2020 ஆம் ஆண்டுதான் கிடைத்தது. இப்பொழுது அவர் 2024 ஆம் ஆண்டு தனக்கு மிகச் சிறந்த ஆண்டாக மாற்றி இருக்கிறார். நீங்கள் சில நேரம் அவரை துவக்க ஆட்டக்காரராகவும், சில நேரம் அவரை மிடில் வரிசையிலும் பேட்டிங் செய்ய வைக்கிறீர்கள். அவருக்கு அதனால் சில தடுமாற்றங்கள் இருந்தது. தற்பொழுது ரிஷப் பண்ட்டை விட அவர் முன்னேறி விட்டார்”
இதையும் படிங்க : வெறும் 7 இன்னிங்ஸ்.. 752 ரன் அடித்தும் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. நம்பிக்கை கொடுத்த சச்சினின் வார்த்தைகள்
“அவர் கேஎல்.ராகுல் உடன் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். அதற்கு அவரே சரியானவராக இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் கடினமாக உழைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். அவரிடம் யாராவது சில தவறுகள் இருக்கிறது என்று கூறினால் அவர் அவர்களுடன் சேரக்கூடாது. ஆனால் அவர் தன் விஷயத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.