டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
நாளை மும்பையில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டுமே சரிசமமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. இருப்பினும் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி சுழற் பந்துவீச்சில் தரமாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணியை எச்சரித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி இந்திய அணியை விட சுழற் பந்துவீச்சில் சிறந்து விளங்குகிறது. வருண் சக்கரவர்த்திக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.டாசன், ரஷீத் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இதில் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து அணியின் பீல்டிங் என்பது மிகவும் சிறப்பாக உள்ளது.
அதில் இங்கிலாந்து அணி விதிவிலக்காக உள்ளது. மேலும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் அனுபவம் சிறப்பானதாக இருக்கிறது. எனவே நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி மும்பையில் சிறப்பாக வேலை செய்ய முடியும் என்று எனக்கு உள் உணர்வு தோன்றுகிறது. தற்போது இங்கிலாந்து அணியை பொறுத்தவரை வெற்றியை பெறுவதற்கு ஒரு சிறந்த வழியை கண்டுபிடித்ததாக தெரிகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.






