5/5 – அதுவும் 3.3 ஓவர்களில்… இந்திய ஜாம்பவானின் 14 வருட ரெக்கார்டை உடைத்த ஆகாஷ் மத்வால்!

0
1960

குறைந்த எக்கானமியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில், ஜாம்பவான் அனில் கும்ப்ளே ரெக்கார்டை உடைத்து முதலிடத்தை பிடித்துள்ளார் ஆகாஷ் மத்வால்.

எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

இந்த இலக்கை சேஸ் செய்த லக்னோ அணிக்கு மேயர்ஸ், மான்கட் இருவரும் ஓபனிங் இறங்கினர். மேயர்ஸ் 18 ரன்களுக்கு ஜோர்டான் பந்திலும், மான்கட் 8 ரன்களுக்கு ஆகாஷ் மத்வால் பந்திலும் அவுட்டாகி, மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்துவந்த க்ருனால் பாண்டியா(8) விக்கெட்டை பியூஸ் சாவ்லா தூக்கினார்.

போட்டியின் 10ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆயுஸ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரான் விக்கெட்டுகளை தூக்கினார் ஆகாஷ் மத்வால். இங்கே தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டுவந்தது.

நன்றாக விளையாடி வந்த ஸ்டாய்னிஸ், ரன் ஓடும்போது தீபக் ஹூடா மீது மோதி தடுமாறி ரன் அவுட் ஆகினார். அடுத்ததாக கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா இருவருமே புரிதல் இல்லாமல் ரன் ஓட முயற்சிக்க, கிருஷ்ணப்பா கவுதம் ரன்அவுட் ஆனார். அடுத்ததாக தீபக் ஹூடா-பிஸ்னாய் இடையே குழப்பம் நேர்ந்து இதில் ஹூடா ரன் அவுட் ஆகினர்.

- Advertisement -

அடுத்த ஓவரில் ரவி பிஸ்னாய் விக்கெட்டை ஆகாஷ் மத்வால் தூக்கினார். பின்னர் 17ஆவது ஓவரில் மோசின் கானை க்ளீன் போல்டு செய்த மத்வால் 5ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இன்றைய ஆட்டத்தில் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். 15 வருட ஐபிஎல் வரலாற்றில் குறைந்த எக்கானமியில் கைப்பற்றப்பட்ட 5 விக்கெட்டுகள் இதுவாகும். இதற்கு 2009ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 4 ஓவர்களில் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அப்போது எக்கானமி 1.57 ஆகும். இதுவே சிறந்ததாக 14 வருடங்களாக இருந்துள்ளது.

அனில் கும்ப்ளே ரெக்கார்டை உடைத்த ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, எக்கானமி 1.4 மட்டுமே வைத்திருக்கிறார். தற்போது இதுதான் ஐபிஎல் பெஸ்ட் எக்கனமியாக இருக்கிறது.

குறைந்த எக்கானமியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்:

  1. ஆகாஷ் மத்வால்(மும்பை) vs லக்னோ, 2023 – 5/5(3.3 ஓவர்கள்) – 1.4 எக்கானமி
  2. அனில் கும்ப்ளே(ஆர்சிபி) vs ராஜஸ்தான், 2009 – 5/5(4 ஓவர்கள்) – 1.57 எக்கானமி
  3. ஜஸ்பிரித் பும்ரா(மும்பை) vs கொல்கத்தா, 2022 – 5/10(4 ஓவர்கள்) – 2.5 எக்கானமி