“மேத்யூஸ்க்கு வேணும்னே அவுட் கேக்கல.. களத்துல இதுதான் நடந்துச்சு!” – பங்களாதேஷ் கேப்டன் வெளிப்படையான பேச்சு!

0
34332
Shahip

சமீபக்காலத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் போதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் முக்கியத்துவம் போல, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கும் முக்கியத்துவம் உருவாகி வருகிறது!

கடந்த காலங்களில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட சில போட்டிகளில், வீரர்களின் உணர்ச்சிகள் பெரிய அளவில் வெளிப்பட்டது. இது களத்தில் சூடான தன்மையை உருவாக்கியது. இதன் காரணமாக இரு அணி வீரர்களுக்கும் இடையே, ஒரு மெல்லிய உரசல் இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இன்று உலகக்கோப்பை தொடரில் மோதிக்கொண்டன. இந்த அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூட, 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதற்கு, இந்த போட்டி முக்கியமான ஒன்றாகவே அமைந்திருந்தது.

இதன் காரணமாக ஆட்டத்திற்குள் கடுமையான போட்டித் தன்மை நிலவியது. இந்த நிலையில் சதிரா ஆட்டமிழந்து வெளியேறிய பொழுது, மேத்யூஸ் இரண்டு நிமிடங்களுக்குள் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்று பங்களாதேஷ் தரப்பில் நடுவர்களிடம் அவுட் அப்பில் செய்யப்பட்டது.

இதை ஆராய்ந்து பார்த்த நடுவர்களும் இறுதியில் மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தார்கள். எனவே இந்த போட்டியில் இறுதிப்பந்து வரை இரு அணிகளுக்கும் உரசல் நீடித்துக் கொண்டே போனது.

- Advertisement -

இறுதியாக 41.1 ஓவரில் இலங்கை நிர்ணயித்த 280 ரன்கள் இலக்கை எட்டி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2 விக்கெட்டும் 82 ரன்களும் எடுத்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்ற ஷாகிப் அல் ஹசன் பேசும்பொழுது “டாஸ் வென்ற பொழுது பந்து வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை. ஏனென்றால் நேற்று இன்று பயிற்சி செய்த பொழுது இரவில் பணி அதிகமாக வந்தது. நாங்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். மேலும் போட்டியை முடிக்க நினைத்தோம்.

மேத்யூஸ் களத்தில் காலத்தாமதம் செய்து கொண்டிருந்த பொழுது, எங்கள் அணியின் வீரர் ஒருவர் வந்து என்னிடம், இப்பொழுது டைம் அவுட் முறையில் அப்பீல் செய்தால் அவர் அவுட் என்று கூறினார். பின்னர் நான் அப்பீல் செய்தேன்.

பின்னர் நடுவர்கள் என்னிடம் வந்து நீங்கள் சீரியஸாக கேட்கிறீர்களா? அல்லது இதை திரும்பப் பெறப் போகிறீர்களா? என்று கேட்டார்கள்.அது கிரிக்கெட் சட்டங்களில் இருக்கிறது. அது சரியா தவறா என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற நாங்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதன் காரணமாக நான் உறுதியான ஒரு முடிவை எடுக்க விரும்பினேன். இது நிச்சயம் பெரிய விவாதத்தை கிளப்பும் என்று தெரியும். இது விதிகளில் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.

மேத்யூஸ் உடனான அந்த வாக்குவாதம் எனக்கு கொஞ்சம் சிறப்பாக செயல்பட உதவியது. எனக்கு இப்பொழுது 36 வயதாகிறது எனவே எளிதில் சண்டை எல்லாம் வராது. ஆனால் இன்று வந்தது கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது!” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்!