இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் சவ்ரவ் கங்குலி 2008 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கங்குலி ஓய்வு பெறும் கடைசி நாளில் கேப்டன் பொறுப்பை வழங்கியது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனி 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்த பிறகு மூன்று வடிவ தொடர்களிலும் அவரே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் சச்சின், ஷேவாக், கங்குலி போன்ற ஜாம்பவான் வீரர்களும் தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார்கள். சீனியர் வீரர்களுக்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுக்கத் தயங்காத தோனி கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறும் போது அவருக்கான மரியாதையை சிறந்த முறையில் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
2008ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் போட்டி முடிவடையும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக கங்குலியிடம் கேப்டன் பொறுப்பை வழங்கி அவரை மிகச் சிறந்த முறையில் கௌரவித்து வழி அனுப்பி வைத்தார். இதுகுறித்து சமீபத்தில் மகேந்திர சிங் தோனி அளித்த ஒரு பேட்டியில் கங்குலிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கங்குலி இருப்பதால் இதைவிட உங்கள் தரப்பிலிருந்து சிறந்த வழியனுப்புதலை எப்படி கொடுத்து விட முடியும்? கடைசி போட்டியில் கடைசி நாளில் அவர் மைதானத்தில் நின்று விளையாடுகிறார். அவர் சிறந்த முறையில் குட் பாய் சொல்லிவிட்டு செல்ல ஏன் முடியாது. திடீரென்று கேப்டன் பொறுப்பு வந்ததால் அதை ரசித்தாரா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க:இல்லாததே கிடையாது.. இந்தப் பையன் கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த பரிசு – மனோஜ் திவாரி பாராட்டு
ஆனால் இதை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நான் முன்னரே எதுவும் திட்டமும் இடவில்லை. களத்தில் வெற்றி பெறும் தருணத்தில் இருக்கும் போது 15 முதல் 20 நிமிடங்கள் இருக்கும்போது அவரை வழி அனுப்பி வைக்க இதுவே சிறந்த முறையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்” என்று மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அந்த போட்டியில் இந்திய அணி இறுதியாக 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.