நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்காக 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மெகா ஏலத்திற்கு பின் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடர் என்பதால், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றனர். இதனால் எந்த அணி பிளே ஆஃப் செல்லும் என்று கணிப்பதே கடினமாக உள்ளது.
இதனிடையே ஐபிஎல் தொடர் அருகில் உள்ள சூழலில், சில நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி அணி நிர்வாகங்கள் மாற்று வீரர்களை தேர்வு செய்து அவர்களை விரைந்து ஒப்பந்தம் செய்து வருகிறது. இதற்கான பணிகளில் ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி இதுவரை காயமடைந்த வீரர்கள், அவர்களுக்கான மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் யார் என்பதை பார்க்கலாம். அதன்படி இங்கிலாந்து அணியின் பிரைடன் கார்ஸ் ரூ.1 கோடிக்கு ஐதராபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது பிரைடன் கார்ஸ் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.
பாவம் மும்பை அணி
அவருக்கு பதிலாக ஐதராபாத் அணி வியான் முல்டரை ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் மும்பை அணியால் ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னராக அல்லா கஜன்ஃபார் ரூ.4.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக விலகினார். அவரது இடத்தில் மற்றொரு ஆஃப்கான் ஸ்பின்னரான முஜீப் உர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான லிசார்ட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலக, அவரது இடத்தில் கார்பின் போஸ்ச் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த உம்ரான் மாலிக், மீண்டும் காயம் காரணமாக விலகினார். இதன்பின் அவர் இடத்தில் சேத்தன் சக்காரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹாரி ப்ரூக் தடை?
டெல்லி அணி தரப்பில் அதிக எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பதவி அளிக்கப்படவிருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் நிர்வாகத்தால் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவரை டெல்லி அணி ரூ.6.25 கோடிக்கு வாங்கி இருந்தது. இவருக்கான மாற்று வீரரை இதுவரை டெல்லி அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.
அதேபோல் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டுள்ள ஃபெர்குசன், லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் மும்பை அணியின் பும்ரா ஆகியோர் ஐபிஎல் தொடரின் தொடக்க வாரங்களில் நடக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களுக்கான மாற்று வீரர்களை அணிக்குள் அந்தந்த அணி நிர்வாகங்கள் தேடி வருகிறது.






