சண்டையை முடித்து வைத்த ஐ.பி.எல் ; க்ருனால் பாண்ட்யா என் சகோதரர் போன்றவர் – தீபக் ஹூடா

0
559
Deepak Hooda and Krunal Pandya LSG

ஐ.பி.எல் தொடரின் சுவாரசியம் ஆட்டங்களைத் தாண்டி விரிந்தது. ஒரே அணி வீரர்கள் எதிரேதிர் அணியில் விளையாடுவார்கள். எதிரெதிர் அணியில் இருந்தபோது சண்டைக்கோழியாய் சீறியவர்கள், முஸ்தபா முஸ்தபா பாடுவார்கள். அண்ணன் தம்பி எதிரெதிர் அணியிலிருந்து மோதுவார்கள். இனி பேசிக்கொள்ளவே வாய்ப்பில்லாத அளவு பகிரங்கமாய் மோதிக்கொண்டவர்கள், அணி நிர்வாகத்தால் ஏலத்தில் ஒரே அணிக்குள் வருவார்கள்!

இதில் கடைசி வகையைச் சேர்ந்த இரு சண்டைக்கோழிகள்தான் க்ரூணால் பாண்ட்யாவும் தீபக் ஹூடாவும். 2020-21 ஆண்டு விஜய் ஹசாரா தொடரில், பரோடா அணிக்கு கேப்டனாக இருந்தவர் க்ரூணால் பாண்ட்யா. அதே அணியில் வீரராய் இடம்பெற்றிருந்தவர் தீபக் ஹூடா.

- Advertisement -

ஒருநாள் திடீரென்று தன்னை கேப்டன் க்ரூணால் பாண்ட்யா கீழாய் நடத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி, பயோ பபிளிலிருந்து வெளியேறினார். பின்பு ராஜஸ்தான் அணிக்கு விளையாடினார். அது அப்போது க்ரூணால் பாண்ட்யாவின் நடத்தை குணநலன் மீது பெரிய விமர்சனத்தை உருவாக்கி இருந்தது.

இந்த நிலையில் 2022 ஐ.பி.எல்-ற்கு லக்னோ அணி இருவரையும் நல்ல விலைக்கொடுத்து வாங்கியிருந்தது. விசயம் தெரிந்தவர்கள், இவர்கள் இருவரும் ஒரே அணியில் களத்தில் செயல்பட போகிறார்கள் என்பதைக் காண ஆவலாய் இருந்தார்கள். ஆனால் முதல் ஆட்டத்தில் விக்கெட் கொண்டாட்டங்களின் போது, இருவரும் கட்டிப்பிடித்து ஆர்ப்பரித்துக் கொண்டாடியதிலிருந்து, பழைய பகையை மறந்து இணைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இப்போது இதுக்குறித்து தீபக் ஹூடா கூறி இருப்பதாவது “க்ரூணால் பாண்ட்யா என் சகோதரர் போன்றவர். எங்களுக்குள் நடந்தது சகோதர சண்டை. நாங்கள் லக்னோ அணிக்காக ஆட்டங்ஙளை வெல்ல வேண்டுமென்று மட்டுமே விளையாடுகிறோம். மேலும் நான் ஐ.பி.எல் ஏலத்தைப் பார்க்கவில்லை. வீரர்கள் ஹோட்டலில்தான் சந்தித்துக் கொண்டோம். நாங்கள் ஒரே அணிக்காக விளையாடுகிறோம். எங்கள் இலக்கு ஓன்றுதான்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -