இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்படலாம் என்ற நிலையில் சூரியகுமார் யாதவை தேர்வு செய்து தேர்வுக்குழு ஆச்சரியப்படுத்தியது. தற்போது ஏன் இப்படியான முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் உண்மை காரணத்தை வெளியிட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றார். எனவே ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் சூரிய குமாரை புதிய கேப்டனாக கொண்டு வந்தார்கள். மேலும் அஜித் அகர்கர் இது குறித்து கூறும் பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை அதிகம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். அவர் அடிக்கடி காயம் அடைவது இதற்கான காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கிடைத்த விஷயங்களை அடிப்படையில் சென்று விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இது அனேகமாக ஐபிஎல் தொடரிலிருந்து வந்திருக்க வேண்டும்.உடல் தகுதியின் காரணமாக ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம், ஆனால் மும்பை அணிக்காக பந்து வீசவும் செய்தார். மேலும் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வீரர்கள் ஹர்திக் பாண்டியா பற்றி என்ன கூறினார்கள் என்று எனக்கு புரியவில்லை. சூரியகுமாருக்கு கேப்டன் ஆகும் தகுதிகள் இருக்கிறது. இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவரால் கேப்டனாக தன்னை நிரூபிக்கவும் முடியும். ஆனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வராததற்கு கூறப்படும் காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
சூரியகுமார் ஒரு அற்புதமான நபர் அவரை எனக்கு பிடிக்கும். ஹர்திக் பாண்டியாவும் அவரைப் போன்றவர்தான். ஆனால் ஹர்திக் பாண்டியாவை நீக்குவதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும். நாங்கள் முன்னேறி செல்ல விரும்புகிறோம் சூர்யாவிடம் இருந்து நீண்ட காலம் கேப்டன் பொறுப்பை வகிக்கும் தகுதியை பார்க்கிறோம் என்று பயப்படாமல் வெளியில் கூறியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு அது பெரிய இழப்பு.. அவங்கள தோற்கடிக்க இதைவிட நல்ல வாய்ப்பு இல்லை – இலங்கை ஜெயசூர்யா பேட்டி
நானும் தேர்வு குழு தலைவராக இருந்திருக்கிறேன் வீரர்களை தேர்வு செய்திருக்கிறேன் நீக்கியும் இருக்கிறேன். நானும் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறேன். நான் கடவுள் என்று என்னை சொல்லவில்லை. நானும் தவறு செய்திருக்கிறேன். ஆனால்சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். எனக்கு அவர்கள் சொன்ன காரணத்தில் நம்பிக்கை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






