தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் தொடரின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் எந்தவித மாற்றங்களும் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. மேலும் மாற்றம் செய்வதற்கான பெரிய மாற்று வீரர்களும் அணியில் இல்லை.
அதே சமயத்தில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரது இடங்களும் கேள்விக்குறியாக இருக்கிறது. இருவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இவர்கள் இருவரது இடத்துக்கும் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேலப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் இருவரும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவுக்கான அடுத்த வாய்ப்பு மிகவும் சந்தேகத்துக்குரிய இடத்தில் இருக்கிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” பிரசித் கிருஷ்ணா இடத்தில் முகேஷ் குமார் விளையாடினால், மக்கள் யாரும் அதிருப்தி கொள்ள மாட்டார்கள். பிரசித் கிருஷ்ணா வலையில் எப்படி பந்து வீசுகிறார் என்பதை பார்த்து, அவரை அணிக்குள் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஏனென்றால் புதிய நிர்வாகம் வீரர்கள் மேல் அக்கறை காட்டுகிறது.
இவர்கள் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். ஆனால் இது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். எனவே இவர்கள் பிரசித் கிருஷ்ணாவை நீக்க ஆர்வம் காட்டலாம். விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியாக இருந்தால் நிச்சயம் மாற்றி விடுவார்கள்.
சர்துல் தாக்கூர் பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் அணியில் இருக்கிறார். வெளிநாட்டு சூழ்நிலைகளில் விளையாடும் பொழுது இந்திய அணி எப்பொழுதும் தங்கள் பேட்டிங் பலத்தில் எச்சரிக்கையாக இருக்கும். சர்துல் தாக்கூர் பேட்டிங் யூனிட்டுக்கு வலிமை தருபவர்” என்று கூறி இருக்கிறார்!






