இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அகமதாபாத்தில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
இந்திய அணி அறிவித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான்,ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் குணமடைந்து டி20 தொடரில் கலந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். பேட்ஸ்மேன்கள் மத்தியில் இவர்கள் மூவரும் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
இந்திய அணி அறிவித்திருந்த வீரர்கள் பட்டியலில் தற்போது பேட்ஸ்மேன்கள் யார் என்று பார்த்தால் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே. இதில் கேஎல் ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ள கே எல் ராகுல்
தென் ஆப்ரிக்க தொடரில் நிறைய போட்டிகளில் விளையாடிய காரணத்தினால் அவருக்கு சிறிது ஓய்வு தேவை. எனவே முதல் ஒருநாள் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அனைவரும் யூகித்த நிலையில், அவர் முதல் ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளாத உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அவருடைய சகோதரியின் திருமணத்தில் அவர் பங்கேற்க போகிறார். அதன் காரணமாகவே அவர் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்து உள்ளார். இருப்பினும் இரண்டாவது ஒருநாள் போட்டி முதல் தொடரின் இதர போட்டிகள் அனைத்திலும் அவர் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.
தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
ஆல்ரவுண்டர் வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருவருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக் கூடிய காரணத்தினாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தற்போது பேட்ஸ்மேன்கள் குறைவாக இருப்பதன் காரணத்தினாலும் இவர்கள் இருவரும் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளதென உறுதியாக நாம் நம்பலாம்.