இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் இதுவரை 17 சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இருப்பினும் அதில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது.
இந்த நிலையில் பெங்களூர் அணி குறித்து அதில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கோப்பையை வெல்லாத ஆர்சிபி
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படும் கேஎல் ராகுல் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு பெங்களூர் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் பஞ்சாப் மற்றும் தற்போது லக்னோ அணிகளில் விளையாடியிருக்கிறார். தற்போது லக்னோ அணி இவரை தக்க வைக்காத நிலையில் பெங்களூர் அணியே இவரை திரும்ப ஏலத்தில் எடுக்கும் என்று ஒரு தகவல் பரவலாக பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தனது ஐபிஎல் அனுபவம் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசிய கேஎல் ராகுல் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி விளையாடி விதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார். 2016ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடிய பெங்களூர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கைவிட்டது.
இறுதிப் போட்டியில் நாங்கள் செய்த தவறு
இந்த நிலையில் இது குறித்து பேசிய கே எல் ராகுல் “விராட் கோலியும், நானும் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து பலமுறை விவாதித்துள்ளோம். எங்களில் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருந்தால் ஐபிஎல் கோப்பையை நிச்சயமாக வெற்றி பெற்று இருப்போம். அந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக இருந்தது. இது சின்னச்சாமி மைதானத்தில் ஒரு விசித்திர கதையாக நிறைவடைந்திருக்கும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டையே மாத்தி இருக்காரு.. என்னோட அடையாளமே இவர்தான் – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி
2016ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே குவித்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதில் விராட் கோலி 54 ரன்கள், கே.எல் ராகுல் 11 ரன்களும் அடித்திருந்தது குறிப்பிடப்பட்ட விஷயமாகும்.






